Published : 03 Apr 2025 05:13 AM
Last Updated : 03 Apr 2025 05:13 AM

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்: அதிமுக, பாஜக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றம்

கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித்தீர்மானம் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி சொன்னார். ஆனாலும், இந்தத் தாக்குதல் தொடர்கிறது.

கடந்த மார்ச் 27-ம் தேதி மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, 97 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறையில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கிறார். அதில், 11 பேரை கடந்த 27-ம் தேதி இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் சொன்ன கணக்குப்படி பார்த்தால், ஒரு நாளைக்கு 2 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

எல்லை தாண்டி வந்தார்கள் என்று சொல்லி அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுகிறது. அண்டை நாடாக இருந்து கொண்டு இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல், நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும்விதமாக, ஏன் அடியோடு பறிக்கும்விதமாக இலங்கைக் கடற்படையினரும், இலங்கை அரசும் நடந்து கொள்வது நமக்கு மிகுந்த கவலையளிக்கிறது. ண்டிக்கத்தக்கது. இதனை மத்திய பாஜக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழக அரசு சார்பில் நான் தொடர்ந்து கடிதம் எழுதுகிறேன். இதுவரைக்கும் மீனவர்கள் கைது, தாக்குதல் குறித்து 74 கடிதங்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் எழுதியிருக்கிறேன். பிரதமரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இதுகுறித்து வலியுறுத்தியுள்ளேன். இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்படவில்லை. தமிழக மீனவர்கள் பிரச்சினையை எவ்வளவு காலத்துக்கு சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இதுபோன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச் சரியான வழியாகும்.

கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரை, கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகிவிட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக கட்சிகள் செய்யும் அதே தவறை மத்திய அரசு செய்வது வருந்தத்தக்கது, ஏற்கமுடியாதது. கச்சத் தீவைக் கொடுத்து, ஒப்பந்தம் போட்ட போதே முதல்வராக இருந்த கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். தமிழக மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று அழுத்தந்திருத்தமாக வாதிட்டு இருக்கிறார். அப்போதைய திமுக எம்.பி.க்கள் இரா.செழியன், எஸ்.எஸ்.மாரிச்சாமி ஆகியோரும் நாடாளுமன்றத்திலே கடுமையாக எதிர்த்துள்ளனர். அதையும் மீறி கச்சத்தீவு ஒப்பந்தம் கடந்த 1974 ஜூன் 28-ம் தேதி கையெழுத்து ஆன நிலையில், மறுநாளே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டி, இதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி அன்றே பிரதமருக்கும் கடிதம் எழுதினார்.

கச்சதீவை மீட்கவும், கச்சத்தீவில் இருக்கும் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக அரசு எடுத்துள்ளது. தமிழக முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தபோது 2 முறையும், ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது ஒரு முறையும் கச்சத்தீவைத் திரும்பப் பெற இந்த பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், 3-வது முறை மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு கச்சத்தீவை மீட்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே, விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் இப்பேரவை விரும்புகிறது.

தீர்மானம்: “தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும். இதை கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமர் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று இப்பேரவை வலியுறுத்துகிறது.” இவ்வாறு முதல்வர் பேசினார்.

அதையடுத்து இத்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வானதி சீனிவாசன் (பாஜக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் அரசு தனித் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தார். இதையடுத்து, பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக பேரவைத்தலைவர் மு. அப்பாவு அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x