Last Updated : 02 Apr, 2025 07:05 PM

6  

Published : 02 Apr 2025 07:05 PM
Last Updated : 02 Apr 2025 07:05 PM

“கார்ப்பரேட் முதலாளிகளை காப்பாற்ற போலி தேசியவாதம் பேசுகிறது பாஜக” - மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் டி.ராஜா சாடல்

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: “தங்களுக்கு நெருங்கிய கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்ற பாஜக போலி தேசியவாதம் பேசுகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா சாடினார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேசியது: “மதுரை நகரில் இம்மாநாட்டை நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பாராட்டுகிறேன். சுரண்டலில் இருந்து விடுதலை பெறுவதற்காக தங்களது உயிரைத் தியாகம் செய்த தோழர்கள் மண்ணில் இன்று நாம் நிற்கிறோம். இந்திய நாட்டின் பாதுகாப்பான வருங்காலத்துக்கும், அனைத்துத் தரப்பு இந்திய மக்களின் நலன்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ள கார்ப்பரேட் மதவெறி கூட்டணிக்கு எதிராக வலிமையான போராட்டம் நடத்த வேண்டும்.

இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஒன்றாய் கரம் கோர்த்து இதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தி இந்தியா விடுதலை அடைவதற்கு அனைத்து மக்களும் ஒற்றுமையாகப் பாடுபட்டது போன்று, ஆர்எஸ்எஸ் - பாஜக மதவெறி கூட்டணி கொடுமைகளிலிருந்து தேசத்தை விடுவிக்க அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபடவேண்டும். உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சக்திகளின் அதி தீவிர செயல்பாடுகளினால் சமத்துவமின்மை முன்பு இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. வகுப்புவாத ஆட்சியாளர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில் தொழிலாளர்களிடையே பிரிவினை, மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். பட்டியலின, பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீதான தாக்குதல்களும், வன்கொடுமைகளும் அண்மைக் காலங்களில் தீவிரமடைந்துள்ளன. விவசாய நெருக்கடிகள் அதிகரித்துள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியம் செய்து, அவர்களது போராட்டங்களை கடுமையான அடக்குமுறை மூலம் ஒடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தங்களுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காக பாஜக அரசு போலி தேசியவாதம் பேசுவதையும் நாடு பார்க்கிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையும், மதச்சார்பின்மை கொள்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்து கடும் எதிர்ப்பைத் தெரிவித்த ஆர்எஸ்எஸ் அமைப்பு, இன்று அதன் அரசியல் கருவியாக உள்ள பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களையே சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறது.

இத்தகைய பின்புலத்தில் ஆர்எஸ்எஸ் பாஜக அரசின் மதவெறி, பிற்போக்கு நிகழ்ச்சி நிரல்களுக்கும், சீர்கேடுகளுக்கும் எதிராக ஒரு வலிமையான சிந்தாந்தப் போரை உடனே நடத்த வேண்டியுள்ளது. மக்களிடையே மதவெறிக் கும்பல் நடத்தும் மூட நம்பிக்கை பிரசாரங்களை முறியடிக்கும் விதமாக அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு உள்பட அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஜனநாயகப் படுத்தப்பட்டு அனைவருக்கும் கிட்டுமாறு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆளும் வர்க்கத்தின் வன்மம் நிறைந்த கொள்கைகளால் தாக்குதலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் அனைத்துப் பிரிவு மக்களையும் ஒன்று திரட்டி, வலுவான போராட்ட இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வோம். இந்த மாநாடு மகத்தான வெற்றி பெறட்டும்”, என்று டி.ராஜா பேசினார். | வாசிக்க > “பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை அணி திரட்ட வேண்டும்!” - மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் பிரகாஷ் காரத் முழக்கம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x