Published : 02 Apr 2025 04:05 PM
Last Updated : 02 Apr 2025 04:05 PM

“ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தனிச் சட்டம் நிறைவேற்றிட வேண்டும்” - முத்தரசன்

சென்னை: சாதியின் பெயரால் தொடர்ச்சியாக ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா (22) ஆணவக் கொலை கொடூரமாக நடந்துள்ளது. வித்யா, வெண்மணி என்ற இளைஞரை காதலித்துள்ளார். இருவரும் வயது வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெண்மணியின் பெற்றோர்கள் வித்யா வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை சந்தித்து முறையாக பெண் கேட்ட நிலையில் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

இந்நிலையில், வித்யா படுகொலை செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாமல் பெண் வீட்டார் அடக்கம் செய்துள்ளனர். வெண்மணி, வித்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல் துறையினர் விசாரித்து வித்யா கொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.

ஆணவ படுகொலை குறித்து விசாரித்த காவல் துறையினர் வித்யாவின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மட்டும் தானா மற்றும் பலரும் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அங்கொன்றும், இங்கொன்றுமாக சாதியின் பெயரால் தொடர்ச்சியாக ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சமாகும். இத்தகைய இழிசெயல் தொடராமல் தடுத்திடவும், நிரந்தர தீர்வு காணவும், உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தனிச் சட்டம் நிறைவேற்றிட வேண்டுமாய் தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ‘பல்லடம் அருகே கொல்லப்பட்ட வித்யாவும், அவர் காதலித்து வந்த வெண்மணியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இது ஆணவக் கொலை இல்லை’ என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x