Published : 02 Apr 2025 03:01 PM
Last Updated : 02 Apr 2025 03:01 PM

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரத்தை வெளியிடாதது ஏன்? - அன்புமணி கேள்வி

சென்னை: தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப்படாதது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரு மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது? என்பதை விளக்கும் Pink Book இன்னும் வெளியிடப்படவில்லை. தொடர்வண்டித் திட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தொடர்வண்டி வாரியம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்களுக்கு 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுக்கான ரூ.6,362 கோடியை விட ரூ.264 கோடி அதிகம் ஆகும். ஆனாலும், இந்த நிதி ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் Pink புத்தகத்தில் தான் இடம் பெற்றிருக்கும். அந்த புத்தகத்தை இந்திய தொடர்வண்டி வாரியம் தான் வெளியிட வேண்டும். அது இன்னும் வெளியிடப்படாத நிலையில், தமிழகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் போதிலும், அதில் பத்தில் ஒரு பங்கு கூட புதிய பாதைகளை அமைக்கும் திட்டங்களுக்கு வழங்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு புதிய தொடர்வண்டித் திட்டங்களுக்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.875 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெறும் ரூ.246 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 70% குறைவு ஆகும்.

திண்டிவனம் - நகரி புதிய பாதைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.350 கோடியில் இருந்து ரூ.153 கோடியாகவும், தருமபுரி - மொரப்பூர் திட்டத்திற்கு ரூ.115 கோடியில் இருந்து ரூ.49 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி, சென்னை - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.25 கோடி மற்றும் மூன்று இரட்டைப் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தலா ரூ.150 கோடி குறைக்கப்பட்டு வெறும் ரூ.1000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த நிதியும் முழுமையாக செலவு செய்யப்பட்டதா? என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 10 புதிய தொடர்வண்டிப் பாதை திட்டங்கள், 9 இரட்டைப் பாதைத் திட்டங்கள், 3 அகலப்பாதைத் திட்டங்கள் என மொத்தம் 22 திட்டங்கள் ரூ.33,467 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.7,154 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. எனினும், புதிய பாதைத் திட்டங்களில் வெறும் 2.75% பணிகளும், இரட்டைப் பாதைத் திட்டங்களில் வெறும் 3.82% பணிகளும் மட்டும் தான் இதுவரை முடிவடைந்துள்ளன. இத்தகைய சூழலில் தொடர்வண்டித் திட்டங்களுக்கு அதிக நிதியை தொடர்வண்டி வாரியம் ஒதுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

எனவே, தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொடர்வண்டித் திட்டத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரத்தை தொடர்வண்டி வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் தொடர்வண்டி வாரியம் வெளியிட வேண்டும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x