Published : 02 Apr 2025 10:50 AM
Last Updated : 02 Apr 2025 10:50 AM

விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வாசன் வலியுறுத்தல்

சென்னை: ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜவுளித் தொழிலின் மிக முக்கியப் பிரிவான விசைத்தறி தொழிலை மிக முக்கிய கவனத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிகைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 150க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களின் வாழ்வாதாரமான விசைத்தறியைப் பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சிக்கு த.மா.கா(மூ) வின் ஆதரவு என்றைக்கும் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

2014 ல் இருந்து கடந்த 11 ஆண்டுகளாக நியாயமான கூலி உயர்வு கேட்கும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.

அதாவது விலைவாசி உயர்வு, மின் கட்டன உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி ஆகியவற்றிற்கு ஏற்ப நியாயமான கூலி உயர்வாக 2022 ல் சோமனூர் ரகத்திற்கு 60 % கூலி உயர்வும், இதர ரகங்களுக்கு 50 % கூலி உயர்வும் தருமாறு பல முறை தமிழக அரசுக்கு மனு கொடுத்ததற்கு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இது சம்பந்தமாக பல முறை மனு கொடுத்தும், கோரிக்கை விடுத்தும், பேச்சு வார்த்தை நடைபெற்றும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றும் தீர்வு எட்டப்படவில்லை.

இதனால் கோவை-திருப்பூர் மாவட்டத்தில் சோமனூர், கண்ணம்பாளையம், அவினாசி, தெகலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சுமார் 1.25 இலட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் சுமூகமானத் தீர்வு எட்டப்படாததால் விசைத்தறியாளர்கள் 02.04.2025 புதன் கிழமை இன்று ஒருநாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

எனவே தமிழக அரசு, கோவை-திருப்பூர் மாவட்ட சாதா விசைத்தறியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கவனத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, அவர்களை மீண்டும் போராட்டக்களத்திற்கு தள்ளாமல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x