Published : 02 Apr 2025 06:07 AM
Last Updated : 02 Apr 2025 06:07 AM
சென்னை: கபாலீஸவரர் கோயிலில் பங்குனி விழாவை முன்னிட்டு நாளைமுதல் 12-ம் தேதிவரை மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பங்குனி பெருவிழா இந்த மாதம் 3-ம் (நாளை) தேதிமுதல் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு விழா நிறைவடையும் வரையில் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
அதுமட்டும் அல்லாமல் ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, ஸ்ரீனிவாச அவென்யூ, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.
அடையாரிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கடகிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
5-ம் தேதி அதிகார நந்தி திருவிழா அன்று காலை 5 மணிமுதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், 9-ம் தேதி தேர் திருவிழா அன்றும் காலை 6 மணிமுதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் 10-ம் தேதி அன்று அறுபத்து மூவர் திருவிழா அன்று மதியம் 1 மணிமுதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் இந்த போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும், இந்த நாட்களில் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்த கோயிலுக்கு சற்று தொலைவில் மாற்று இடங்களை போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT