Published : 02 Apr 2025 06:15 AM
Last Updated : 02 Apr 2025 06:15 AM
சென்னை: காலநிலை மாற்றம் காரணமாக `மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு வழக்கத்தை காட்டிலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படுவதாகவும் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மெட்ராஸ் ஐ பாதிப்பு. இந்த பாதிப்பு காற்று மூலமாக பரவக்கூடியதாகும். மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகித்தால் மற்றவர்களுக்கும் இந்த நோய் தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவு மண்டலத் தலைவரும், முதுநிலை மருத்துவருமான டாக்டர் சவுந்தரி கூறியதாவது:
மெட்ராஸ் ஐ என்பது எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய்த் தொற்றுதான். ஆனால் அதை ஆரம்பகட்ட நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அலட்சியம் செய்தால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்படும். கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாகும்.
பொதுவாக ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ தொற்று ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
மெட்ராஸ் ஐ தொற்று பாதித்தவர்கள் தாங்கள் பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணிய வேண்டும். கடந்த சில வாரங்களாக மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகமாக இருப்பது உறுதிசெய்யப்படுகிறது. அவர்களில், பலர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT