Published : 02 Apr 2025 05:33 AM
Last Updated : 02 Apr 2025 05:33 AM
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் உட்பட நாடு முழுவதுமிருந்து கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை 8 மணியளவில் தியாகிகள் நினைவு செங்கொடி ஏற்றப்ட்டு, அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மூத்த தலைவர் பிமான் பாசு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
காலை 10.30 மணியளவில் நடைபெறும் பொது மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார், வரவேற்புக் குழுத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டச்சார்யா, அகில இந்திய பார்வட் பிளாக் பொதுச் செயலாளர் ஜி.தேவராஜன் பங்கேற்கின்றனர். மாலையில் கலை நிகழ்ச்சிகள், திரைப்பட இயக்குநர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள் நடக்கின்றன.
நாளை (ஏப்.3) நடக்கும் மாநாட்டுக்கு மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் மாநாட்டு உரை நிகழ்த்துகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா , மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் தேசிய, மாநில நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள்.
தொடர்ந்து, வரும் 6-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள், தீர்மானங்கள் நிறைவேற்றும் நிகழ்வுகள் நடக்கின்றன. மாநாட்டில் பங்கேற்பதற்காக, நாடு முழுவதும் இருந்து மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
முன்னதாக, மாநாட்டில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரை வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோரை மார்க்சிஸ்ட் மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சு.வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT