Published : 30 Mar 2025 01:17 AM
Last Updated : 30 Mar 2025 01:17 AM
சென்னை: தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்தார். அரசியல் வட்டாரத்தில் இதுதொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் டெல்லி சென்று அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று அதிமுக கூறி வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ரகசியமாக டெல்லி சென்று, மத்திய அமைச்சர் அமித் ஷாவை கடந்த மார்ச் 25-ம் தேதி சந்தித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மக்கள் பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சரை சந்தித்தேன் என பழனிசாமி விளக்கம் அளித்தாலும், அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் இது 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.
பழனிசாமியின் சந்திப்பை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று முன்தினம் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் அதே நாளில் அமித் ஷாவையும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 2026-ல் கூட்டணி அமைக்க பாஜக கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அத்திட்டத்துக்கான முதல்படியாக பழனிசாமியுடனான சந்திப்பை பாஜகவினர் நடத்தி இருந்தனர். அந்த சந்திப்பின்போது, 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் "கூட்டணி தொடர்பாக தேர்தல் நெருக்கத்தில் முடிவு செய்யலாம். எங்கள் தலைவர்களையும், அதிமுகவையும் தொடர்ந்து விமர்சித்து வரும் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்று பழனிசாமி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த கோரிக்கையை தவிர்க்கும் வகையில் மாற்று திட்டத்தை செயல்படுத்த பாஜக முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே செங்கோட்டையனை பாஜக டெல்லிக்கு அழைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பழனிசாமி அனுமதியின்றி செங்கோட்டையன் டெல்லி சென்ற விவகாரம் அரசியல் வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஓமலூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பழனிசாமி பதில் அளிக்கவில்லை.
மத்திய அமைச்சர்களை சந்திக்க கடந்த 28-ம் தேதி ரகசியமாக மதுரை விமான நிலையம் வழியாக செங்கோட்டையன் டெல்லி சென்றது தெரியவந்துள்ளது. அமித் ஷா, நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பின்போது கட்சி ஒருங்கிணைப்பை விரும்பும் செங்கோட்டையனிடம் அதிமுக ஒருங்கிணைப்பை தீவிரப்படுத்துமாறு பாஜக அறிவுறுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. பழனிசாமியுடன் அண்மைக் காலமாக செங்கோட்டையன் பாராமுகமாக இருந்து வருவதால், 2026 தேர்தலில் பாஜகவுடனான கூட்டணிக்கு பழனிசாமி முட்டுக்கட்டை போட்டால், செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை கட்டமைப்பது குறித்தும் கூட விவாதித்து இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக வட்டாரங்களில் கேட்டபோது, "அதிமுவுக்கு பழனிசாமிதான் சிறந்த தலைமை. செங்கோட்டையன் தலைமை ஏற்க வாய்ப்பே இல்லை. கட்சியில் யாரை இணைத்துக் கொள்வது, தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதெல்லாம் முழுக்க முழுக்க பழனிசாமியின் முடிவுதான். அதிமுகவுக்கு தலைமையேற்கும் அளவுக்கு செங்கோட்டையன் திறன் பெற்றவர் இல்லை. பழனிசாமியின் அனுமதியின்றி சென்றிருந்தால், அவர் மீது பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT