Published : 29 Mar 2025 03:58 PM
Last Updated : 29 Mar 2025 03:58 PM
சேலம்: தன் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே, 2026-ல் தவெக - திமுக இடையேதான் போட்டி என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார், என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், 2026 தேர்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டி என்று பேசியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தவெக தலைவர் விஜய் அவருடைய கருத்தைக் கூறுகிறார். நாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக, இதுபோன்ற கருத்துக்களைக் கூறுவார்கள். அனைத்துக் கட்சித் தலைவர்களும் அப்படித்தான்” என்றார்.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும்போது விஜய் அப்படி கூறியது ஏன்? என்ற கேள்விக்கு, “அதிமுக பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கான அங்கீகாரத்தையும் மக்கள் கொடுத்துள்ளனர். எனவே, 2026 தேர்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டி என்று விஜய் ஏன் கூறினார், என்று அவரிடம் கேளுங்கள்.” என்றார்.
திமுக, பாஜகவை விமர்சித்துப் பேசிய விஜய் அதிமுக குறித்து பேசாததற்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு, “அதிமுக தலைவர்கள் அப்படி இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் முதல் புதிய கட்சி தொடங்குபவர்களும் சரி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி செய்திருக்கின்றனர். அதனால், விஜய் அதிமுகவை கோடிட்டுக் காட்டவில்லை” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT