Published : 29 Mar 2025 01:01 AM
Last Updated : 29 Mar 2025 01:01 AM
அடுத்த ஆண்டில் தமிழகம் இதுவரை சந்திக்காத ஒரு தேர்தலை சந்திக்கும் என்றும் தமிழக பெண்கள்தான் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டபோகிறார்கள் என்றும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சிதான் திமுகவும் நடத்துவதாகவும் விஜய் விமர்சித்துள்ளார்.
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை முடிவை கைவிட வேண்டும், மும்மொழிக் கொள்கையை திணிக்கக் கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்த முடிவுகளை எடுக்க கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் அளிப்பது என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து விஜய் பேசியதாவது: மன்னராட்சியின் முதல்வரே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் ஆட்சியிலும் அதைக் காட்ட வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சிதான் திமுகவின் ஆட்சியும். என் தொண்டர்களையும் என் மக்களையும் பார்ப்பதற்கு தடை போடுவதற்கு நீங்கள் யார், சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதால் அமைதியாக இருக்கிறேன்.
முதல்வரே, உங்க ஆட்சியை பற்றி கேள்வி கேட்டால் எதற்கு இவ்வளவு கோவம் வருகிறது. உங்க ஆட்சியில் படிக்கும் பெண் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றிச் சொல்ல முடியவில்லை. இதில் உங்களை அப்பா என்று அழைக்கிறார்களாம். தினம் தினம் இந்த கொடுமைகளை அனுபவித்து கொண்டிருக்கும் இதே தமிழக பெண்கள்தான் உங்க அரசியலுக்கும், ஆட்சிக்கும் முடிவு கட்டபோகிறார்கள்.
அதேபோல் கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் பிரதமர் மோடி ஜிக்கு தமிழகம் என்றாலோ தமிழர்கள் என்றாலோ அலர்ஜி. தமிழகம் பல பேருக்கு தண்ணீர் காட்டிய மாநிலம். எனவே பிரதமர் தமிழகத்தை கவனமாக கையாள வேண்டும். தவெக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிசெய்வோம். அடுத்த ஆண்டில் தமிழகம் இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி. அதில் தவெகவுக்கு வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: எந்த தீயசக்தியை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினாரோ அதே இடத்தில் இருந்து தவெக கட்சி தொடங்கியுள்ளது. இதுவரை தளபதி என்று அழைக்கப்பட்ட விஜய்யை இனி வெற்றி தலைவர் என அழைக்க வேண்டும். புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. காமராஜர் ஆட்சியை உருவாக்க தமிழக காங்கிரஸ் முயற்சிக்கவில்லை. சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில் கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்ப மறுக்கின்றனர். வேங்கைவயல் பிரச்சினைக்கு விசிக தலைவர் திருமாவளவன் போகவில்லை. எனவே, மக்கள் பிரச்சினைகளை பேசுங்கள். அப்படி பேசுபவர்களை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், துணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT