Published : 26 Mar 2025 10:33 AM
Last Updated : 26 Mar 2025 10:33 AM
அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் காணொலியில் கலந்துரையாடினார். அப்போது, ஒரு சில மாவட்ட நிர்வாகிகள் திமுக அமைச்சர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு கட்சிக்கு துரோகம் செய்வதாக கண்டிப்புடன் சுட்டிக்காட்டினார். கண்டிப்புக்கு ஆளானதில் திருச்சி அதிமுக நிர்வாகிகளும் அடக்கம்.
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர்கள் கே.என்.நேருவும் அன்பில் மகேஸும் திமுக-வுக்கு அரணாக இருப்பவர்கள். இவர்களோடு தொடர்புவைத்துக் கொண்டு அதிமுக பொறுப்பாளர்கள் சிலர் தங்களுக்கு தேவையானதை சாதித்துக் கொள்வதாக தலைமைக்கு புகார்கள் பறந்தன. அவர்களைத்தான் காணொலி கூட்டத்தில் கண்டித்திருக்கிறார் பழனிசாமி.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருச்சி அதிமுக-வினர் சிலர், “திருச்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாபன் 2021-ல் கே.என்.நேருவை எதிர்த்து நின்று தோற்றவர். அப்போதே அவரது செயல்பாடுகள் அத்தனை திருப்தியாக இல்லை. நேருவின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில், பத்மநாபன் நேருவிடம் நெருக்கமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழிலிலும் திமுக புள்ளிகளுடன் டீலிங் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். உறையூர் பகுதிச் செயலாளரான பூபதியும் அமைச்சர் நேருவுடனான நெருக்கத்தை வைத்து ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்.
புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, நேரு, அன்பில் மகேஸ் இருவரையுமே பகைத்துக் கொள்வதில்லை. புறநகர் வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளராக இருந்த தொட்டியம் ரவிச்சந்திரன், நேருவுக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிமுக ஐடி விங்க் நிர்வாகியை கண்டித்தார். இந்தப் புகாரில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
மணப்பாறை நகர துணைச் செயலாளரான பத்தி பாஸ்கரின் மனைவி சுதா 2022-ல் நகர்மன்றத் தலைவராக வெற்றி பெற்றார். திமுக கோட்டையான மணப்பாறையில் நகர்மன்ற தலைவர் பதவியை தவறவிட்ட சம்பவம் அப்போது பேசுபெருளானது. இதனால் மணப்பாறை நகராட்சியை கைப்பற்ற காய் நகர்த்திய அமைச்சர் நேரு, ஆறே மாதத்தில் அதை சாதித்தும் காட்டினார். அவரிடம் நகர்மன்றத் தலைவர் பதவியை தாரை வார்த்துவிட்டார் பத்தி பாஸ்கர்.
அண்மையில் பத்தி பாஸ்கர், தனியார் நிலத்தில் பாறைகளை வெடி வைத்து தகர்த்தபோது விபத்து ஏற்பட்டு நாதக நிர்வாகி சரவணன் காயமடைந்தார். இதுதொடர்பாக பத்தி பாஸ்கர் மீது மணப்பாறை போலீஸார் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், நேரு தரப்பினரின் ‘கருணை’யால் காவல்துறை பத்தி பாஸ்கரை நெருங்கவில்லை.
இதேபோல், தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ஒருவர் மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மணல் ஆரோக்கியத்துடன் இன்றைக்கும் நெருக்கமாக உள்ளார். இப்படி பலரும் திமுக அமைச்சர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தங்களுக்கானதை சத்தமில்லாமல் சாதித்து வருகிறார்கள்” என்றனர்.
இதுகுறித்து உறையூர் பகுதிச் செயலாளர் பூபதியிடம் கேட்டதற்கு, “அமைச்சர் நேருவின் போன் நம்பர் கூட என்னிடம் இல்லை. திமுக-வை எதிர்த்து சண்டை போடும் ‘அம்மா பிள்ளைகள்’ நாங்கள். அப்படியிருக்கையில் எங்களை திமுக-வினருடன் தொடர்பில் இருப்பதாக கூறுவது சுத்த ஹம்பக்” என்றார். புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமாரோ, “மணப்பாறை சேர்மன் பதவி விவகாரத்தில் மணப்பாறை ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தான் மூளையாகச் செயல்பட்டார்.
அதனால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்” என்றார். புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி, “சார்... நான் பிறகு பேசுகிறேன்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாபனை நாம் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
அதிமுக பொறுப்பாளர்கள் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுவது குறித்து திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசனிடம் கேட்டதற்கு, “மாநகர் மாவட்ட நிர்வாகிகள் யாரும் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இல்லை. ஜூம் மீட்டிங்கில் பேசிய பொதுச்செயலாளர், கட்சிப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
நிர்வாகிகள் யாராவது திமுக அமைச்சர்களுடன் தொடர்பிலிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் சொன்னார்” என்றார். திருமணம் உள்ளிட்ட விழாக்களில் அதிமுக-வினர் திமுக-வினருடன் ஒன்றாக பங்கெடுத்தாலே கட்சியிலிருந்து கட்டம் கட்டிவிடுவார் ஜெயலலிதா. அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போனதால் தான் இப்படியும் நடக்கிறது அதிமுகவில்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT