Published : 25 Mar 2025 12:50 PM
Last Updated : 25 Mar 2025 12:50 PM
சென்னை: “எக்காரணத்தை கொண்டும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். இது குறித்து அவர் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளதாக செய்தி வந்துள்ளது. டெல்லிக்குச் செல்லும் எடப்பாடி பழனிசாமி, அங்கு சந்திப்பவரிடம் இருமொழிக்கொள்கை குறித்து வலியுறுத்த வேண்டும்.
தமிழும், ஆங்கிலமும் தான் தமிழகத்தின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. எக்காரணத்தை கொண்டும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று ஒன்றிய அரசுக்கு விளக்கமளித்து இருக்கிறோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும், பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம் என்ற உறுதியை வலியுறுத்தினேன். இரண்டாயிரம் கோடி என்ன, பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டேன் என தெரிவித்திருக்கிறேன். இது பணப் பிரச்சினை அல்ல இனப் பிரச்சினை. நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. தடைக்கற்கள் உண்டென்றால் அதை உடைத்தெறியும் தடந்தோள் உண்டென்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சி இது.
யார் எந்த மொழியை கற்பதிலும் தடையாக இருப்பதில்லை. அதே வேளையில், தமிழை அழிக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. மூன்றாவது மொழியை திணிக்க அனுமதித்தால், அது நம்மை மென்று தின்றுவிடும் என்று வரலாறு உணர்த்துகிறது. இந்தி மொழி திணிப்பு என்பது, பண்பாட்டு அழிப்பாக அமையும் என்பதால் தான் இந்தியை எதிர்க்கிறோம். இந்த மொழித் திணிப்பின் மூலமாக மாநிலங்கள், மாநில மொழிகள் மூலம் ஒரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள்.
இதற்கு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமை தொகுதிகளாக நினைப்பதால்தான், இது போன்ற மொழி திணிப்புகளும், நிதி அநீதிகளையும் செய்கிறார்கள். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியை காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என உறுதியளிக்கிறேன்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT