Published : 21 Mar 2025 06:18 PM
Last Updated : 21 Mar 2025 06:18 PM
சென்னை: “பட்ஜெட் விவாதத்தின் மீதான பதில் உரையில், நிதியமைச்சர் அதிமுகவின் கூட்டல், கழித்தல் கணக்கை பற்றி பேசினார். ஏனென்றால் கணக்கு தானே அவருக்கு முக்கியம். அவர் பட்ஜெட்டை கணக்கை முதலில் சரியாக செயல்படுத்தட்டும். எங்களது கணக்கை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சட்டப்பேரவையில் நடைபெற்றபொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் பதிலுரையில் நிதியமைச்சரின் வார்த்தை ஜாலம் இருந்ததே தவிர, செயல்பாடுகள் எதுவும் இல்லை. தமிழகத்தில் பெட்ரோல், மது விற்பனை மூலமாக 2025-26-ம் ஆண்டில் ரூ.1.63 லட்சம் கோடி வருவாய் தமிழக அரசுக்கு கிடைக்கும். இது கடந்த 2020-21-ம் ஆண்டில் கிடைத்த வருவாயை விட ரூ.81,431 கோடி அதிகம். அதேபோல் ஜிஎஸ்டி, பத்திரப்பதிவு, கலால் வரி, வாகன வரி என மாநில அரசு வரி வருவாய் மூலம் ரூ.1.01 லட்சம் கோடி 2020-21ம் ஆண்டை விட 2025-26-ல் கூடுதலாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் மத்திய அரசின் வரிப்பகிர்வு ரூ.33 ஆயிரம் கோடி கூடுதலாக கிடைக்கும். இதையெல்லாம் இணைத்து பார்க்கும்போது ரூ.1.34 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. மேலும் கடனாக ரூ.1.05 லட்சம் கோடி வாங்கவும் அரசு திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ரூ.2.39 லட்சம் கோடி தமிழக அரசிடம் உள்ளது. இதில் மூலதன செலவாக ரூ.57 ஆயிரம் கோடி எதிர்பார்க்கப்படும் நிலையில் அதை கழித்தால் ரூ.1.82 லட்சம் கோடி. இதில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு மகளிர் உரிமை தொகை கொடுக்கப்படும்.
மீதம் ரூ.1.68 லட்சம் கோடிக்கு வருவாய் வரவு உள்ளது. இதில் என்னென்ன புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளனர் என்று பார்த்தால் எதுவும் இல்லை. இதையெல்லாம் மறைத்து ஏதேதோ புள்ளிவிவரங்களை காட்டி மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர். திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் 10 ஆயிரம் சிறு, குறு தொழிகள் மூடப்பட்டுள்ளன. பலர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். மின்கட்டண உயர்வால், தமிழகத்துக்கு வரவேண்டிய சிறு, குறு தொழில்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன.
மேலும் நிதியமைச்சர் தனது உரையில் அதிமுகவின் கூட்டல், கழித்தல் கணக்கை பற்றி பேசினார். ஏனென்றால் கணக்கு தானே அவருக்கு முக்கியம். அவர் பட்ஜெட்டை கணக்கை முதலில் சரியாக செயல்படுத்தட்டும். எங்களது கணக்கை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். ‘ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்’. அதிமுகவில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது, கட்சி அலுவலகம் தாக்கப்படும் என காவல்துறையில் புகார் அளித்தும், அலுவலகம் குண்டர்களால் தாக்கப்பட்டது.
அதேநேரம் திமுகவில் உள்கட்சி விரிசல் வந்தபோது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடுநிலையாக செயல்பட்டு அறிவாலயத்தை பாதுகாத்தார். அதுதான் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் உள்ள வித்தியாசம். எனவே எங்கள் மீது திமுக கரிசனம் காட்ட தேவையில்லை. எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். திமுகவின் வார்த்தை ஜாலங்களில் மயங்கும் கட்சி அதிமுக அல்ல. அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது. அதிமுகவை பொறுத்தவரை கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. இரண்டையும் பொருத்திப் பார்க்கக் கூடாது.
கூட்டணி என்பது தேர்தல் வரும்போது வாக்குகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து எதிரிகளை வீழ்த்துவதற்காக அமைக்கப்படுவது. அதனால் ஒவ்வொரு முறையும் மாறிமாறி இருக்கும். ஆனால் கொள்கை என்பது நிரந்தரமானது. ஆனால் திமுக அப்படியில்லை. அறிவாலயத்தின் மேல் மாடியில் சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது கீழ் மாடியில் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக நடத்தி கொண்டிருந்தது. எமெர்ஜென்சியில் திமுகவினர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அப்படிப்பட்ட கட்சியுடன் இன்றைக்கு கூட்டணி வைத்திருக்கின்றனர்.
இதுதான் திமுகவின் நிலைமை. அப்படிப்பட்ட நிலை அதிமுகவுக்கு என்றைக்கும் வராது. அதிமுக விழித்துக்கொண்டது. விழித்துக்கொண்டவர்கள் எல்லாம் பிழைத்து கொள்வார்கள். திமுகவை அகற்றுவதே அதிமுகவின் நிலைப்பாடு. அதுவே எங்களுடைய கொள்கை. மற்றவர்கள் யாரும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. திமுக அரசு 2026 தேர்தல் மக்கள் துணையோடு அகற்றப்படும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT