Published : 19 Mar 2025 06:48 PM
Last Updated : 19 Mar 2025 06:48 PM

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க யார் காரணம்? - பேரவையில் காரசார விவாதம்

சென்னை: தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க யார் காரணம் என்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) காரசார விவாதம் நடந்தது.

சட்டப்பேரவையில் புதன்கிழமை பட்ஜெட் மீது நடந்த விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினர் அதிமுக உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், “சிறப்பான நிதி மேலாண்மை செய்து வருவாய் பற்றாக்குறையை குறைப்போம், கடனை குறைப்போம் என்று கூறினீர்கள். ஆனால், இந்த ஆண்டு ரூ.4.5 லட்சம் கடன் வாங்கியுள்ளீர்கள். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு கடன் வாங்கலாம் என்பதற்காக மூச்சு முட்டும் அளவுக்கு கடன் வாங்க வேண்டுமா? ஒவ்வொரு தனிநபரின் தலையிலும் ரூ.1.32 லட்சமும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4.13 லட்சமும் கடன் இருக்கிறதே என்று மக்கள் கவலையில் உள்ளனர்” என்றார்.

அப்போது பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2015-2016-ம் ஆண்டு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதமாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2020-2021-ல் 3.38 சதவீதத்தை தொட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் திறமையான நிதி மேலாண்மையின் காரணமாக வருவாய் பற்றாக்குறை அளவை 1.17 சதவீதமாக குறைத்தோம்.

2016-2017-ல் 1.92 சதவீதமாக இருந்ததை வருவாய் பற்றாக்குறை 2025-2026-ம் ஆண்டு 1.54 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2017-2021 காலகட்டத்தில் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட 57 சதவீதம் கடன் வாங்கப்பட்டது. நாங்கள் 2021-205 காலகட்டத்தில் அதை 47.5 சதவீதமாக குறைத்துள்ளோம். மருத்துவ மொழியில் சொல்வதென்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவை படிப்படியாக குறைத்து பழைய நிலைக்கு கொண்டுவந்துள்ளோம்” என்றார்.

அப்போது விஜயபாஸ்கர், “வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே. சர்க்கரையின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது?” என்றார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “2020-2021 கரோனா காலக்கட்டம். அரசுக்கு சாலை வரி வரவில்லை. மதுபான வருமானமும் கிடைக்கவில்லை. பத்திரப் பதிவு வருவாய் இல்லை. தொழில் துறை முடங்கியதால் எந்தவிதமான வரி வருவாயும் இல்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று விளக்கம் அளித்தார்.

அப்போது குறுக்கிட்ட நிதி அமைச்சர், “நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தபோதும் கரோனா பாதிப்பும், பொருளாதார மந்தநிலையும் தொடர்ந்தது. இருப்பினும் சிறப்பான நிதி நிர்வாகத்தால் பொருளாதார வளர்ச்சி மீண்டது” என்றார்.

அதற்கு எதிர்க்கட்சித் தலைவர், “கரோனா காலத்தில் எந்தவிதமான வரி வருமானம் இல்லாத சூழலிலும் நாங்களும் சிறப்பாகவே செயல்பட்டோம்” என்றார். தொடர்ந்து
அமைச்சர் தங்கம் தென்னரசு, “அப்போது மத்திய அரசில் உங்களுக்கு இணைக்கமான சூழல் இருந்தது. நீங்கள் சில சமரசங்களை செய்தீர்கள். ஆனால், நாங்கள் அதுபோன்று எந்தவிதமான சமரசங்களும் செய்யவில்லை” என்று பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x