Published : 18 Mar 2025 12:58 AM
Last Updated : 18 Mar 2025 12:58 AM

அரசின் கடன் குறித்து பேரவையில் காரசார விவாதம்: இபிஎஸ், ஓபிஎஸ் கேள்விகளுக்கு முதல்வர், அமைச்சர்கள் பதில்

தமிழக அரசின் கடன் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அதிமுகவின் கே.பி.முனுசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 14-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 15-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. விவாதத்தை தொடங்கி வைத்து, அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசியதாவது:

மாநில திட்டக்குழு தயாரித்த தமிழக பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டு 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கான அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. 2025-26, 2026-27, 2027-28 ஆகிய ஆண்டுகளி்ல் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள நீங்கள், 2028-29, 2029-30 ஆகிய ஆண்டுகளில் ஏற்படக்கூடிய வளர்ச்சி குறித்து ஏன் குறிப்பிடவி்ல்லை. நீங்கள் 3 ஆண்டுகளுக்கு அளித்துள்ள தரவுகளின்படி, ஆண்டுக்கு 15 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அப்படி என்றால், 2028-29, 2029-30 ஆகிய ஆண்டுகளில் 37.5 சதவீத வளர்ச்சி இருந்தால் மட்டுமே, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட முடியும். ஒரு ட்ரில்லியன் டாலர் என்பது ரூ.100 லட்சம் கோடி. கடந்த 2021-ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.74.17. இன்று ரூ.86.80 ஆக உயர்ந்துள்ளது. 2030-ல் இது உயரும்போது 1 ட்ரில்லியன் டாலரின் மதிப்பு மேலும் உயரும்.

கடந்த 2019-ல் 2-வது முறையாக பிரதமரான மோடி, ‘‘2025-ல் இந்தியா 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும்’’ என்றார். ஆனால், அவ்வாறு எட்டவில்லை. தேசிய அளவில் ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சி உள்ள நிலையில், தமிழக அரசின் வளர்ச்சி இலக்கு சாத்தியமற்றது.

திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி கடனாக பெற்றுள்ளது. அனைத்து வரிகள், கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அரசின் நிதி ஆதாரம், கடன் உயர்ந்தும், அதற்கேற்ப புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:

அமைச்சர் தங்கம் தென்னரசு: அதிமுக ஆட்சியில் பெற்ற கடன் வளர்ச்சி 128 சதவீதம். திமுக ஆட்சியில் அது 93 சதவீதம் மட்டுமே. இந்திய அரசுகூட ரூ.181 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. கடன் வாங்குவது, பொருளாதார நடைமுறையில் ஏற்கப்பட்ட ஒன்றுதான். முதல்வரின் நடவடிக்கையால் தேசிய பொருளாதார வளர்ச்சியைவிட, தமிழகத்தில் இரு மடங்காக உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: கடனை குறைக்க நீங்கள் குழு அமைத்தும், எப்படி உயர்ந்தது?

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்: கடன் வாங்கிய தொகையில் மூலதன செலவுதான் செய்ய வேண்டும். அந்த விதியை கடைபிடித்தீர்களா?

தங்கம் தென்னரசு: உங்கள் ஆட்சியில் மத்திய அரசுடன் சமரசம் செய்தீர்கள். நிதி கிடைத்தது. நாங்கள் மத்திய அரசிடம் உரிமைக்காக போராடியும் நிதி கிடைக்கவில்லை. கடன் வாங்கிய பணத்தை நலத் திட்டங்கள் செயல்படுத்தவே செலவிடுகிறோம்.

முனுசாமி: எம்ஜிஆர் சத்துணவு திட்டம் கொண்டு வந்தார். ஜெயலலிதா பச்சிளம் குழந்தை முதல் அனைத்து தரப்பினருக்கான திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் நீங்களோ, மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் என வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே திட்டங்களை அறிவிக்கிறீர்கள்.

முதல்வர் ஸ்டாலின்: பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்ட பயனாளிகள் வாக்காளர்களா?

தங்கம் தென்னரசு: வாக்குரிமை இல்லாத இலங்கை தமிழர்களுக்கு 7,000 வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். நல்ல திட்டம் கொண்டு வந்தால் பாராட்டுங்கள்.

பழனிசாமி: காலை உணவு திட்டத்தை நாங்கள்தான் முதலில் தொடங்கினோம். பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை ஏன் நிறுத்தினீர்கள்?

ஸ்டாலின்: உங்கள் ஆட்சியிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் தரவில்லை. நான் முதல்வர் ஆனதும், ‘எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் வருந்தும் வகையில் எனது ஆட்சி இருக்கும்’ என அறிவித்தேன்.

முனுசாமி: கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில், விவசாயிகள் நலன் சார்ந்த 83 வாக்குறுதிகளை அளித்த திமுக, அதில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை.

பேரவை தலைவர் அப்பாவு: தாமிரபரணி ஆற்றை தூர்வாரும் திட்டத்தை முடித்திருக்கிறோம். பேசுவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது.

(அதிமுக எம்எல்ஏக்கள் கூச்சல்)

பழனிசாமி: நடுநிலை தவறுகிறீர்கள்.

அப்பாவு: இவ்வாறு கூச்சலிட கூடாது.

பழனிசாமி: கூச்சலிடவில்லை, பேசத்தான் அனுமதி கோரினோம்.

இவ்வாறு காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

இதன்பிறகு, அமைச்சர் துரைமுருகன், ‘‘ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறீர்களா?’’ என்று கூறியதும், அவை முழுவதும் சிரிப்பலை எழுந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x