Published : 16 Mar 2025 04:25 PM
Last Updated : 16 Mar 2025 04:25 PM
பழநி: தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்துக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமிழக மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து, தமிழக அரசுடன் கைகோர்த்து தேமுதிக போராடும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லவிழாவில் பங்கேற்க வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தேமுதிக வரவேற்கிறது. காரணம், 2006ஆம் ஆண்டு தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு அறிவிப்புகளை, இந்த ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக தமிழக விவசாயிகளை பல்வேறு நாடுகளுக்கும் அழைத்துச் சென்று வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து அதற்கேற்ப தமிழகத்தில் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. மெட்ரோ ரயில், பெண்களுக்கான திட்டங்களையும் அறிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்புக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழலா என்பதன் உண்மைத்தன்மை குறித்து அமலாக்கத் துறை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அன்னை மொழி காப்போம், அனைத்து மொழி கற்போம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தமிழகத்தை பாதிக்கும் வகையில் நடந்துகொண்டால், தமிழக மக்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசுடன் சேர்ந்து தேமுதிக போராடும்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT