Published : 16 Mar 2025 02:29 PM
Last Updated : 16 Mar 2025 02:29 PM

மும்மொழிக் கொள்கை: திமுக மீதான பவன் கல்யாண் குற்றச்சாட்டும் ரியாக்‌ஷன்களும்!

பவன் கல்யாண்

மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டியுள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு திமுக தரப்பில் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசியல் வாதிகள் இரட்டைவேடம் போடுகிறார்கள் என்று தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் குற்றம்சாட்டியிருந்தார். வணிக லாபத்துக்காக தமிழ் மொழி படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுபவர்கள் இந்தி மொழியை படிக்க வேண்டும் என்றால் மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், பவன் கல்யாணுக்கு பதில் அளித்து திமுக செய்தித் தொடர்பாளர் சயீது ஹபிசுல்லா கூறியிருப்பதாவது: மும்மொழிக் கொள்கை விஷயத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து பவன் கல்யாணுக்கு சரியான புரிதல் இல்லை. இந்தி மொழியையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியையோ யாரும் படிப்பதை தமிழகம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். தமிழகத்தில் இந்தி பிரச்சார சபாக்கள் மூலம் இந்தி படிக்க விரும்புவோருக்கு கற்று தரப்படுகிறது. ஆனால், தேசிய கல்விக்கொள்கை, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் வாயிலாக இந்தியை கட்டாயப்படுத்தும்போதுதான் பிரச்சினை எழுகிறது என்றார்.

திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறும்போது, "கடந்த 1938-லிருந்தே இந்தியை நாங்கள் எதிர்த்து கொண்டிருக்கிறோம். கல்வியாளர்களின் ஆலோசனையின்பேரில் தமிழகம் எப்போதும் இருமொழிக்கொள்கையையே பின்பற்றும் என்று கடந்த 1968-ம் ஆண்டே பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போது பவன் கல்யாண் பிறந்திருக்கவே மாட்டார். அவருக்கு தமிழக அரசியல் தெரியாது. பாஜக ஆட்சியில் ஏதாவது லாபம் பெற முடியும் என்ற நோக்கில் அவர் பாஜகவை ஆதரிக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தள பதிவில் "மொழி தடையை தாண்டி திரைப்படங்கள் பார்ப்பதற்கு தொழில்நுட்பங்கள் நம்மை அனுமதிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். அதோடு பவன் கல்யாணின் முந்தைய பதிவையும் கனிமொழி பகிர்ந்துள்ளார். அதில், "2017ம் ஆண்டு ஏப்.23ம் தேதி, இந்தியே திரும்பிப் போ என்ற வாசகத்துடன் வெளியான தெலுங்கு செய்தியை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, வடஇந்திய அரசியல் தலைவர்கள் நாட்டின் கலாச்சார பன்முகத் தன்மையை புரிந்து கொண்டு மதிப்பளிக்க வேண்டும்" என பவன் கல்யாண் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் தற்போதைய பதிவில் "தமிழகத்தில் இந்தியை எதிர்க்கிறார்கள். அதேநேரம், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கிறார்கள். இதில் என்ன லாஜிக் உள்ளது" என கூறியுள்ளார். இதை கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில், "எங்கள் மீது இந்தியை திணிக்காதீர்கள் என்று சொல்வது பிற மொழி மீதான வெறுப்பால் அல்ல. நமது தாய் மொழியையும், தாயையும் சுய மரியாதையுடன் காப்பதற்காகத்தான் என்பதை பவன் கல்யாணிடம் யாராவது சொல்லுங்கள்" என தெரிவித்துள்ளார்.

பாஜக வரவேற்பு: இந்நிலையில், இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் விக்ரம் ரந்தாவா கூறும்போது, "இந்தி நம் நாட்டின் தேசியமொழி. அனைத்து மக்களுக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கோடு மத்திய அரசு செயல்படுகிறது. இந்தி மொழி பயன்பாட்டை தென்னிந்தியா முழுவதும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x