Published : 16 Mar 2025 09:23 AM
Last Updated : 16 Mar 2025 09:23 AM

“வாக்காளர்களை மொழி மயக்கத்திலேயே வைத்திருக்க நினைக்கிறார்கள்!” - ஹெச்.ராஜா சிறப்பு நேர்காணல்

ஹெச்.ராஜா

மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி பேசிவிடுபவர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா. அதிலும், ஆளும் திமுக-வை தாக்குவதில் அண்ணாமலைக்கும் ஒருபடி மேல் என்று சொல்லலாம். அதிமுக - பாஜக கூட்டணி, மும்மொழிக் கொள்கை விவகாரம், விஜய் அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஹெச்.ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

​மும்​மொழி கொள்கை விவ​காரத்​தில் மத்​திய அரசு இத்​தனை பிடி​வாத​மாக இருப்​பது ஏன்? நிதி தரமாட்​டேன் என்று சொல்வது எல்​லாம் சர்​வா​தி​காரம் இல்​லை​யா?

தேசிய கல்விக் கொள்​கையில் ஒரு அம்சம்தான் மும்மொழிக் கொள்கை. தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களை மறைப்​ப​தற்காக மும்மொழிக் கொள்கை திட்ட எதிர்ப்பை திராவிடக் கும்பல் கையில் எடுத்​துள்ளது. அதற்காக தமிழக மக்களை 1965, 1967-ம் ஆண்டு காலகட்ட மனநிலைக்கு கொண்டு போவதுதான் இவர்களது திட்டம்.

நேரடி நெல் கொள்​முதல் நிலையங்​களில் ரூ.300 கோடி ஊழல், டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி ஊழல். இவற்றையெல்லாம் மறைப்​ப​தற்காக தமிழக வாக்காளர்களை மொழி மயக்கத்​திலேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்​கி​றார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது. மக்கள் விழித்துக் கொண்​டு​விட்​டனர்.

திமுக-​காங்​கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மும்மொழிக் கொள்கை இருந்தது. அதாவது, 3-வது மொழியாக இந்தி அல்லது சம்ஸ்​கிருதம் படிக்க வேண்டும். ஆனால், 2019-ல் பாஜக அரசு, கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைத்து, அதன் அறிக்கை அடிப்​படையில் இந்தி, சம்ஸ்​கிருதம் என்று இருந்ததை மாற்றி இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை 3-வது மொழி​யாகப் படிக்​கலாம் என மாற்றி​னார்கள். பன்முகத்​தன்மை பற்றி இவர்களுக்கு அக்கறை இருக்​கு​மானால் இதனை வரவேற்​றிருக்க வேண்டும்.

பிஎம் ஸ்ரீ பள்ளி​களுக்கான திட்டத்தில் சேர ஆர்வம் இருப்பதாக அப்போதைய தமிழக தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா கடிதம் எழுதி​யுள்​ளார். அதன் கடைசி வரியில், 3, 4-வது தவணைத் தொகையை வழங்குங்கள் என்று குறிப்​பிடப்​பட்​டுள்ளது. உங்களுக்கு மும்மொழிக் கொள்கை வேண்டா​மென்றால் நீங்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்ட முதல் இரண்டு தவணைத் தொகைகளை (தலா ரூ.1,600 கோடி) திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும்.

ஏற்கெனவே அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த உறுதி​மொழி அடிப்​படை​யில்தான் 1 மற்றும் 2-வது தவணை தொகைகள் வழங்கப்​பட்டது. இவர்களின் நேர்மை​யின்மை, இரட்டை வேடத்தை மாணவர்கள், பெற்றோர்கள் தெரிந்து கொண்​ட​தால்தான் அவர்களை தூண்டிவிட முடிய​வில்லை. தமிழுக்காக உயிரைக் கொடுப்போம் என்று கூறுவதை மக்கள் இனி நம்பமாட்​டார்​கள்.

இந்​தியை திணித்​தால் தமி​ழ​கத்​தின் தனிக் குணத்​தைப் பார்ப்​பீர்​கள் என முதல்​வ​ரும், மொழிப் போருக்கு தமி​ழ​கம் தயா​ராக இருக்​கிறது என்று துணை முதல்​வ​ரும் சொல்லி இருக்​கி​றார்​களே..?

அவர்களை எதிர்​கொள்ளத் தயாராக இருக்​கி​றோம். திமுக-வின் ஊழல் ஆட்சியை ஒழிக்​காமல் தமிழன் தலைநிமிர முடியாது. எந்த மாநிலத்​திலும் டாஸ்மாக் தலைமை அலுவல​கத்தில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற​வில்லை. இங்குதான் நடந்துள்ளது. கலால் வரியில் மட்டும் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்துள்ளது.

மதுபான கொள்கை ஊழலைச் சொல்லி டெல்லி​யிலும் சத்தீஸ்​கரிலும் பாஜக ஆட்சியைப் பிடித்​துள்​ளது. தமி​ழ​கத்​தி​லும் டாஸ்மாக் சம்​பந்​தப்​பட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யிருப்​ப​தன் தொலைநோக்​கம் அது​தானோ?

உறு​தியான தகவல் இல்லாமல் அமலாக்கத் துறை சோதனை நடத்தாது. டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்த​தால், இங்குள்ள துணை முதல்​வ​ருக்கு பயம் வந்துள்ளது. மதுபான கொள்கை ஊழலின் நூலைப் பிடித்து வந்தால் அது தமிழகத்தில் முடிவடை​யும். மணலில், டாஸ்மாக்கில் நடந்துள்ள ஊழல் மிக மோசமானது.

மாநில பாஜக தலை​வ​ருக்​கான போட்​டி​யில் நீங்​கள் இருக்​கிறீர்​களா?

பாஜக-வில் பல்வேறு பொறுப்​புகள் வகித்த நான், கட்சித் தலைமை​யிடம் பதவி, கட்சிப் பொறுப்பு, சீட் என எதையும் கேட்டது கிடையாது. அண்ணாமலை லண்டன் போனபோது, அமைப்​பாளராக இருக்கச் சொன்​னார்கள். அப்பணியை ஆற்றினேன். கட்சி தலைமை சொல்வதை செய்வது மட்டுமே எனது பழக்கம். ரேஸில் இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது.

தமிழக பாஜக தலை​வர்​கள் பலரும் ஆளுநர்​களாக ஒரு ரவுண்டு வந்​து​விட்​டார்​கள். அந்த வாய்ப்பு உங்​களுக்கு ஏன் இன்​னும் அமைய​வில்​லை?

நான் அரசியலில் இருந்து வெளியே போக வேண்டும் என்று நினைக்​கிறீர்களா? எனக்கு இன்னும் வயது இருக்​கிறது. அண்ணன் இல.கணேசன் என்னைவிட 12 ஆண்டுகள் மூத்தவர்.

ஒரு காலத்​தில் பாஜக-வை​யும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்​கிய சீமானுடன் பாஜக இப்​போது கைகுலுக்​கிக் கொண்​டாடு​கிறதே?

தமி​ழ​கத்தில் பெரியாரின் மோசமான பின்னணி பற்றி பேசிய முதல் அரசியல்வாதி நான்தான். பெரியாருக்கு எதிராக 20 ஆண்டுகளாக பேசி வருகிறேன். சீமான் இப்போதுதான் பேசுகி​றார். சீமானுக்கு முன்னோடி நான்தான். அவர் பேசுவதில் எங்களுக்கு உடன்பாடு இருக்​கிறது.

பாஜக இல்​லாமல் பழனி​சாமி​யால் வெற்​றிக் கூட்​ட​ணியை அமைக்க முடி​யும் என நினைக்​கிறீர்​களா?

அரசியல் சண்டைகளுக்கு அப்பாற்​பட்டு, கொள்​கைகளை தாண்டி, அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டு​மா​னால், திராவிட மாடல் ஆட்சியை அகற்ற வேண்டும். எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் காழ்ப்​புணர்ச்​சியும் இல்லை. தமிழகத்தில் பெரிய அளவில் போதைப் பொருள் புழக்கம் உள்ளது. போதை ஒழிப்பு மாநாட்டில் பேசிய ஆளுநர், “கஞ்சாவை பிடித்​துள்​ளீர்கள். சிந்தடிக் போதைப் பொருள் ஒரு கிராம் அளவிலாவது தமிழக காவல்துறை பிடித்​துள்​ளதா?” என்று கேட்டார். இதற்கு முதல்​வரிட​மிருந்து இதுவரை பதில் இல்லை. தமிழ்ச் சமுதாய​மும், இளைஞர்​களும் நாசமாகிக் கொண்டு இருக்​கி​றார்​கள்.

பாஜக ஆட்​சிக்கு வந்​தால் இந்து சமய அறநிலை​யத் துறை நீக்​கப்​படும் என்​கி​றாரே அண்​ணா​மலை?

இதற்கு முன்னாடியே இந்து சமய அறநிலையத் துறையை நீக்க வேண்டும் என நான் பேசியுள்​ளேன். இந்துக்​களுக்கு எதிரான அரசாக இருப்​பதால் கோயில்கள் எப்படி மேம்படும். இந்து அல்லாதவர்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளாக இருப்​பதால் அறம் கெட்ட துறையாக, இந்து அறத்தை அழிக்கும் துறையாகவே இருக்​கிறது. எனவே, இத்துறையை தூக்கி எறிய வேண்டும் என அண்ணாமலை பேசியிருப்பது சரிதான்.

வேலுமணி, செங்​கோட்​டையன் போன்றவர்களை வைத்து பழனி​சாமியை பணி​ய​வைக்க பார்க்​கிறதா பாஜக?

கற்​பனைக்கு பதில் சொல்ல முடி​யாது.

அதி​முக, பாஜக, நாதக, தவெக என திமுக-வுக்கு எதி​ரான கட்​சிகள் எல்​லாம் தனித்​தனி​யாக நின்​றால் அது திமுக-வுக்​குத்​தானே சாதக​மாக அமை​யும்?

தமிழக வெற்றிக் கழகத்தால் திமுக கூட்ட​ணிக்குத் தான் நஷ்டம். திமுக பேசும் விஷயங்​களைத்தான் விஜய் பேசுகி​றார். புதிதாக அரசியலுக்கு வந்தவர் புதிதாக எதையாவது செய்ய வேண்டும். அவ்வாறு அவர் செய்ய​வில்லை. யார் அவருக்கு ஆலோசனை சொல்​கி​றார்களோ தெரிய​வில்​லை... அதே பழைய பஞ்சாங்கம். ஈ.வெ.ரா. புராணம், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என திமுக சொல்​வதையே சொல்லிக் கொண்​டிருக்​கி​றார்.

தவெக-வால் திமுக கூட்ட​ணிக்கு 8 முதல் 10 சதவீத வாக்குகள் பிரியும். விசிக-வுக்கு பெரிய பாதிப்பு இருக்​கும். காங்கிரஸிடம் உள்ள கிறிஸ்துவ மத ரீதியான வாக்குகள் பிரியும். திமுக-வுக்கும் வாக்குகள் பிரியும். திமுக கூட்ட​ணிக்கு பெரிய நஷ்டம் வரும் போது, அது எங்களுக்குச் சாதகமாக அமையும் என்பது எனது கணிப்பு.

நடிகர் விஜய்​யிடம் சிந்தாந்த தெளிவு இல்லை. அதில் அவர் குழப்​ப​மாகவே இருக்​கி​றார். எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிவிட முடியாது. விஜயகாந்​தாலேயே முடிய​வில்லை. தலைசிறந்த நடிகரான சிவாஜிகணேசனும் அரசியலில் சாதிக்க முடிய​வில்லை. எனவே, சினிமா பிரபல்​யத்தை மட்டும் வைத்துக் கொண்டு விஜய் வெற்றி பெற்றுவிட முடியாது. ஆனால், வரும் தேர்தலில் கணிசமான வாக்குகளை அவர் பிரிப்​பார்.

பிரதமர் மோடி இந்​தியை வளர்ப்​பதை விட்​டு​விட்​டு, இந்​தி​யாவை வளர்க்க முயற்​சிக்க வேண்​டும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​யிருப்​பது பற்​றி..?

பாஜக ஆட்சிக் காலத்தில் இந்தி​யாவின் வளர்ச்சி பற்றி முதல்​வ​ருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்​கிறேன். 2014-ல் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, இந்தியா பொருளா​தா​ரத்தில் உலகளவில் 11-வது இடத்தில் இருந்தது. இப்போது 5-வது இடத்தில் உள்ளது. பல்வேறு சர்வதேச நிதியகங்கள், நிதி அமைப்​புகள் கணிப்​பின்படி 2027-ம் ஆண்டு இந்தியா 3-வது இடத்துக்கு வரும். எனவே, முதல்வர் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வளர்ச்​சியை முன்​னிறுத்தி தேர்​தலைச் சந்​தித்த பாஜக-​வும், இப்​போது இலவசங்​களை அறிவிக்​கத் தொடங்​கி​விட்​டதே?

ஏற்​கெனவே இருந்த அரசு செயல்​படுத்திய இலவச திட்டங்களை நிறுத்​தினால் மக்கள் ஏற்கமாட்​டார்கள். அதனால்தான் நாங்களும் தொடர்கிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x