Published : 16 Mar 2025 01:44 AM
Last Updated : 16 Mar 2025 01:44 AM
தமிழகத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ என்ற புதிய திட்டம் 2025-26-ம் ஆண்டில் ரூ.125 கோடி மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
நீர் வடிப்பகுதி மேம்பாடு திட்டம் ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் 30,910 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்படும்.
சென்னை, தூத்துக்குடி, கோவை, மதுரை ஆகிய 4 இடங்களில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மைய உயிர்ம வேளாண் விளைபொருள் தரநிர்ணய ஆய்வகங்கள் ரூ.6.16 கோடி செலவில் அமைக்கப்படும்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே அக்ரி ஹேக்கத்தான் (வேளாண் திருவிழா) நடத்தப்பட்டு அதன்மூலம் தகுதியான தொழில்நுட்பங்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் நிதி உதவி வழங்கப்படும். இதற்காக வேளாண் விஞ்ஞானி எம்எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆராய்ச்சி நிதி ரூ.1 கோடியில் ஏற்படுத்தப்படும்.
முந்திரி வாரியம்: முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில், தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும்.
2025-26-ம் ஆண்டில் பனை சாகுபடியை ஊக்குவிக்க 10 லட்சம் பனை விதைகள், பனை மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிக்கும் கூடங்கள், மதிப்புக் கூட்டுதல் பயிற்சி ஆகிய இனங்களுக்கு பனை மேம்பாட்டு இயக்கத்தில் ரூ.1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வெண்ணெய்ப்பழ (அவகோடா) சாகுபடி 500 ஏக்கரில் தென்காசி, திண்டுக்கல், தேனி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறு, குறு விவசாயிகள் சிறிய நிலப்பரப்பில் வேளாண் பணிகளை தாங்களே மேற்கொள்ள உதவிடும் வகையில், உழவர்களுக்கு 7,900 பவர் டில்லர்கள், 6 ஆயிரம் விளை களையெடுப்பான்கள் மானியத்தில் வழங்கப்படும்.
பயிர் சாகுபடிக்கு ஏற்ற வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடுவதற்கு வசதியாக, 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.10.50 கோடி மானியத்தில் அமைக்கப்படும்.
கடைமடை விவசாயிகளுக்கும் பாசன நீர் தங்கு தடையின்றி கொண்டு செல்வதற்காக, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களில் 2,925 கி.மீ. நீளத்துக்கு ரூ.13.80 கோடி நிதி ஒதுக்கீட்டில் தூர்வாரப்படும்.
ஊட்டச்சத்து வேளாண்மை: ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில், ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ என்ற புதிய திட்டம் 2025-26-ம் ஆண்டில் ரூ.125 கோடி மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் ஆழியார் நகர், திருப்பதிசாரம், பையூர், தஞ்சை ஆராய்ச்சி நிலையங்களில் ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் அமைக்க ரூ.4.46 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டம் ரூ.35.26 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
கோடைக்கால பயிர் திட்டத்துக்கு ரூ.10.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2025-26-ம் ஆண்டில் 3 லட்சம் ஏக்கரில் ரூ.168 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1.30 லட்சம் உழவர்கள் பயன்பெறும் வகையில், நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும். 3 ஆயிரம் ஏக்கரில் ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீட்டில் 7 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மல்லிகை சாகுபடி ஊக்குவிக்கப்படும். ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT