Published : 15 Mar 2025 02:16 PM
Last Updated : 15 Mar 2025 02:16 PM
சென்னை: “என்னை சந்திப்பதை ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடமே சென்று கேளுங்கள். தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்” என்று செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்புடன் பதில் அளித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்தார். அவர் அதிமுக பொதுச் செயலாளர் தலைமையில் நடந்த அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஆலோசனையில் கடந்த இரண்டு நாட்களாக கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் கடந்த இரு தினங்களாக உங்களைச் சந்திப்பதை தவிர்ப்பதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதை அவரிடம் கேளுங்கள். காரணம், அவரைக் கேட்டால்தானே தெரியும்?! என்னை சந்திப்பதை அவர் ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடம் சென்று கேளுங்கள். இதெல்லாம் இங்கே கேட்கவேண்டிய கேள்வி இல்லை. தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் இன்று சிலர் வரவில்லை. அவர்களுக்கு வேலை இருக்கும். அதிமுக சுதந்திரமாக செயல்படுகின்ற கட்சி. திமுக போல அடிமை ஆட்கள் இங்கு கிடையாது. நான் திருமணத்துக்குச் செல்கிறேன், அதில் அவர் கலந்துகொள்ளவில்லை, இவர் கலந்துகொள்ளவில்லை என்று செய்தி வெளியிடுகிறீர்கள். என்றைக்குமே நான் யாரையும் எதிர்பார்த்தது கிடையாது.
நான் ஒரு சாதாரண தொண்டன். தலைவன் கிடையாது. திமுக போல வாரிசு அரசியல் இங்கு கிடையாது. அதிமுக குடும்பக் கட்சி கிடையாது. சர்வாதிகார ஆட்சியும் கிடையாது. அதிமுகவில் சுதந்திரமாக அனைவரும் செயல்படலாம். எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் போகலாம். யாரையும் கேட்பதற்கில்லை. எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது.
அதிமுகவில் இருக்கும் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். அதற்கு எந்த தடையும் கிடையாது. எந்தக் கட்சியிலும் இப்படிப்பட்ட சுதந்திரம் கொடுக்கவில்லை. அதிமுக மட்டும்தான் இத்தகைய சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. காரணம் நாங்கள் எல்லாம் ஒன்றாக இருந்து பணியாற்றியவர்கள்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தனித்து செயல்படுகிறாரா செங்கோட்டையன்? - 2025-26-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வெள்ளிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்தக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், சட்டப்பேரைவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக, அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை அவரது அறையில் தனியாக சந்தித்துப் பேசினார். மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு அவர் வழக்கமாக வருகைதரும் வழியாக இல்லாமல் கடந்த இரு நாட்களாக வேறு நுழைவாயில் பகுதியாக சட்டப்பேரவைக் வருகைகு தந்தார்.
பிரச்சினை என்ன? - அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றக் காரணமாக இருந்ததாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு, அத்திக்கடவு - அவிநாசி திட்டக் கூட்டமைப்பினர் சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியில் பிப்.9ம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து அப்போது அவர், “அத்திக்கடவு - அவிநாசி திட்ட விழாவை புறக்கணிக்கிறேன் என்பதைக் காட்டிலும், என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT