Published : 15 Mar 2025 08:41 AM
Last Updated : 15 Mar 2025 08:41 AM
திருச்சி: தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை தர முடியும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.
திருச்சியி செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதுபோல, சென்னை மாநகராட்சியில் கழிப்பறைத் திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. இதுபோன்ற ஊழல்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவும் வர வேண்டும். அது பழனிசாமியுடனா, பழனிசாமி இல்லாமலா என்று தெரியாது.
அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா இணைந்தாலும், நாங்கள் தனிக்கட்சி தொடங்கியுள்ளதால், தொண்டர்களின் கருத்து கேட்டுத்தான் முடிவு எடுக்கப்படும். தமிழக அரசின் பட்ஜெட் லோகோவில் ‘ரூ’ என்ற எழுத்து மாற்றப்பட்டது சிறுபிள்ளைகள் விளையாட்டுபோல உள்ளது.
தமிழ் மொழி குறித்து பெரியார் கூறியதைத்தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். பெரியார் எங்களுக்கும் கொள்கை ரீதியான தலைவராக இருந்தாலும், அவரது கடவுள் மறுப்பு, பிராமணர் எதிர்ப்பு கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT