Published : 15 Mar 2025 06:20 AM
Last Updated : 15 Mar 2025 06:20 AM

தமிழக அரசுக்கு மொத்தம் ரூ.45,152 கோடி இழப்பு: பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: கல்வி திட்ட நிதி, புயல், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட இனங்களில் மத்திய அரசிடம் இருந்து வரும் தொகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழக அரசுக்கு ரூ.45,152 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வரும் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசின் நிதி நிலைமையை விளக்கி பேசியதாவது: நடப்பு 2024-25-ம் ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.1,95,173 கோடியாக மதிப்பிடப்பட்ட மாநில மொத்த வரி வருவாய், திருத்த மதிப்பீடுகளில் ரூ.1,92,752 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் மாநில சொந்த வரி வருவாய் ரூ.2,20,895 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது வணிக வரி ரூ.1,63,930 கோடி, முத்திரைத்தாள், பத்திரப் பதிவு கட்டணம் ரூ.26,109 கோடி, வாகன வரி ரூ.13,441 கோடி, மாநில ஆயத்தீர்வை ரூ.12,944 கோடி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மாநில பொருளாதார வளர்ச்சி, வரிவிகித திருத்தங்கள், வரி வசூல் திறன் முன்னேற்றத்தால் மாநில சொந்த வரி வருவாய் வரும் ஆண்டில் 14.60 சதவீதம் வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.30,728 கோடியாக மதிப்பிடப்பட்ட வரியல்லாத வருவாய், திருத்த மதிப்பீடுகளில் ரூ.28,124 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இது ரூ.28,819 கோடியாக இருக்கும். ஒட்டுமொத்தமாக வரும் ஆண்டில் மாநில சொந்த வருவாய் மதிப்பீடான ரூ.2,49,713 கோடி, மொத்த வருவாய் வரவுகளில் 75.31 சதவீதமாக இருக்கும்.

அரசின் முயற்சியால் மாநில சொந்த வரி வருவாய் உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள், மத்திய வரிகளில் பங்கு ஆகியவை மொத்த வருவாய் சதவீதத்தில் குறைந்துகொண்டே வருகிறது. மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்தது, ஃபெஞ்சல் புயலுக்கான நிதியை விடுவிக்காதது, மிக்ஜாம் புயல், தென் மாவட்ட பெருவெள்ள நிவாரணமாக சொற்ப நிதி ரூ.276 கோடியை விடுவித்தது ஆகியவை மாநில நிதிநிலையை வெகுவாக பாதித்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.23,364 கோடியாக மதிப்பிடப்பட்ட மத்திய அரசு உதவி மானியங்கள், திருத்த மதிப்பீடுகளில் ரூ.20,538 கோடியாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கல்வி திட்டத்தின் முழு பங்குத் தொகையை மத்திய அரசு விடுவிக்கும் என எதிர்பார்த்து, வரும் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் மத்திய அரசு உதவி மானியங்கள் ரூ.23,834 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, மத்திய வரிகளில் தமிழகத்துக்கான பங்கு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.49,755 கோடியாக மதிப்பிடப்பட்ட நிலையில், திருத்த மதிப்பீடுகளில் ரூ.52,491 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருத்த மதிப்பீடுகளில் இது உயர்ந்திருந்தாலும், மேல்வரிகள், கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு தொடர்ந்து அதிக அளவில் விதிப்பதால் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய பங்கு மிக குறைவாகவே உள்ளது.

மத்திய பட்ஜெட் அடிப்படையில் வரும் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் மத்திய வரிகளின் பங்கு ரூ.58,022 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதத்தை கொண்டுள்ள நாம், தேசிய பொருளாதார வளர்ச்சியில் 9 சதவீத பங்களிக்கும் அதே வேளையில், மத்திய வரிகளில் தமிழகத்துக்கான பங்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே என்பது மாநிலத்துக்கு இழைக்கப்படும் அநீதி.

மத்திய அரசிடம் இருந்து வரும் தொகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மாநில அரசுக்கு ரூ.45,152 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டுக்கான நிதி பற்றாக்குறையில் 44.43 சதவீதம் ஆகும்.

சுருக்கமாக, நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.2,99,009 கோடியாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவினங்கள், திருத்த மதிப்பீடுகளில் ரூ.2,93,906 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இது ரூ.3,31,569 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீடுகளைவிட 12.81 சதவீதம் அதிகம்.

செலவினத்தை பொருத்தவரை, வளர்ச்சி பணிகள் சாரா செலவினங்கள் குறைந்துள்ளன. இதனால், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.3,48,289 கோடியாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் செலவினங்கள், திருத்த மதிப்பீடுகளில் ரூ.3,40,374 கோடியாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் இது ரூ.3,73,204 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதி்ப்பீடுகளைவிட 9.65 சதவீதம் அதிகம்.

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.47,681 கோடியாக மதிப்பிடப்பட்ட மூலதன பணிகளுக்கான செலவினங்கள், திருத்த மதிப்பீடுகளில் ரூ.46,766 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வரும் ஆண்டில் ரூ.57,231 கோடியாக இருக்கும். அதேபோல, 2025-26 பட்ஜெட்டில், நிகர கடன் உள்ளிட்ட மூலதன செலவினங்கள் ரூ.65,328 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மதி்ப்பீடுகளில் ரூ.49,279 கோடியாக மதிப்பிடப்பட்ட வருவாய் பற்றாக்குறை, திருத்திய மதிப்பீடுகளில் ரூ.46,467 கோடியாக குறைந்துள்ளது. வரும் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் இது மேலும் குறைந்து ரூ.41,635 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசின் முயற்சிகளால் வருவாய் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.17 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி பற்றாக்குறை நடப்பு ஆண்டு பட்ஜெட் மதிப்பீடுகளில் ரூ.1,08,690 கோடியாக மதிப்பிடப்பட்டது. திருத்திய மதிப்பீடுகளில் ரூ.1,01,698 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இது ரூ.1,06,963 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில உற்பத்தி மதிப்பில் 3 சதவீதமாக இருக்கும். இது நிதிநிலையை மேம்படுத்துவதில் அரசுக்கு உள்ள உறுதிப்பாட்டை காட்டுகிறது.

நிகர கடன் குறைந்துள்ளபோதும், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் 26.41 சதவீதமாக உள்ள கடன் விகிதம், திருத்திய மதிப்பீடுகளில் 26.43 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26 பட்ஜெட்டில் 26.07 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்எம்எஸ் மூலம் பட்ஜெட் அறிவிப்புகள்: சட்​டப்​பேர​வை​யில் பட்​ஜெட் உரையை நிதி அமைச்​சர் தங்​கம் தென்​னரசு நேற்று நண்​பகல் 12 மணி அளவில் வாசித்து முடித்​தார். இந்​நிலை​யில், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்​டும், பட்​ஜெட்​டின் முக்​கிய அம்​சங்​கள், முக்​கிய அறி​விப்​பு​கள் ஆகியவை குறுந்​தகவல் (எஸ்​எம்​எஸ்) மூலம் பொது​மக்​களின் செல்​போன்​களுக்கு அனுப்​பப்​பட்​டன. தமிழக அரசின் எக்ஸ் வலைதள பக்​கத்​தின் லிங்க் இணைக்​கப்​பட்​டிருந்​தது. அதை கிளிக் செய்து மேலும் பல அறி​விப்​பு​களை பொது​மக்கள் அறிந்து கொள்ள முடிந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x