Published : 15 Mar 2025 03:14 AM
Last Updated : 15 Mar 2025 03:14 AM
சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சுற்றுலாத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரும்.
மேலும், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும், மாமல்லபுரம், திருவண்ணாமலை, ராமேசுவரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழனி மற்றும் நாகூர் - வேளாங்கண்ணி பகுதிகளில் சுற்றுலாப் பணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், உரிய கட்டமைப்பு வசதிகளை நவீன தரத்துடன் அமைத்திட ரூ.300 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இப்பணிகளை ஒருங்கிணைத்து முறையாகச் செயல்படுத்திட, முதல்கட்டமாக, மாமல்லபுரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், ராமேசுவரம் நகரங்களுக்கென தனித்தனியே வளர்ச்சி ஆணையங்கள் உருவாக்கப்படும். மேலும், அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தின் மையப் பகுதியில் சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் எழில்மிகு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். இதில், நறுமணப் பொருட்கள் தோட்டம், நகர்ப்புர வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிபாதைகள் ஆகியவை இடம் பெறும்.
மாமல்லபுரம் - மரக்காணம் கடலோர சுற்றுலா வழித்தடம், திருச்சி - தஞ்சாவூர் - நாகை சோழர்காலச் சுற்றுலா வழித்தடம், மதுரை - சிவகங்கை மரபுசார் சுற்றுலா வழித்தடம், கோவை - பொள்ளாச்சி இயற்கை நலன் சுற்றுலா வழித்தடம் ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுற்றுலா வளர்ச்சிக்கு பொதுத் துறை மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்த்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
3,000 பேருந்துகள் வாங்க ரூ.1,031 கோடி: வரும் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.1,031 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கு உகந்த 750 பேருந்துகளை முற்றிலும் புதுப்பித்து இயக்குவதற்காக, ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு 950, கோவைக்கு 75, மதுரைக்கு 100 என மொத்தம் 1,125 மினி பேருந்துகள் உலக வங்கி மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடனுதவியுடன் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.2,000 கோடி தொகையுடன் ஊக்க நிதியம் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின்கீழ் செயல்திறன் இடைவெளி நிதியாக ரூ.646 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மகளிர் விடியல் பயண திட்டத்துக்கான ரூ.3,600 கோடி, மாணவர்களுக்கான பேருந்து கட்டண மானியத்துக்காக ரூ.1,782 கோடி, டீசல் மானியத்துக்காக ரூ.1,85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT