Published : 15 Mar 2025 02:37 AM
Last Updated : 15 Mar 2025 02:37 AM
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், அரியலூர் மாவட்டம் தா.பழூர், ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை, திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருப்பூர் மாவட்டம் காங்கயம், தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.152 கோடியில் செலவில் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு கூடுதலாக 1,308 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவர்.
கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி பெறும் வகையில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், கோவை மாவட்டம் பேரூர் மற்றும் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஆகிய இடங்களில் விடுதி வசதிகளுடன் 7 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.148 கோடியில் தொடங்கப்படும் இதனால் ஆண்டுக்கு கூடுதலாக 1,370 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவர்.
கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, தசைக்கூட்டு வலி பிரச்சினை உள்ளிட்ட பணி சார்ந்த நோய்களைக் கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், 40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து, மருத்துவப் பரிசோதனை அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 16.70 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடைவர்.
தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 2,000 தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்கும் வகையில் தலா ரூ.20,000 மானியமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள இணையம் சார்ந்த சேவைப் பணித் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், 15 லட்சம் தொழிலாளர்களுக்கு, விபத்து மரணம் மற்றும் இயலாமை இழப்பீட்டுக்கான குழுக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும், இவ்வகை சேவைப்பணி தொழிலாளர்களுக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வுக்கூடங்கள், சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்கப்படும். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,975 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 கோடியில் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம்: வெப்ப அலையை மாநிலம் சார்ந்த பேரிடராக தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் வெப்ப அலையால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்பு மற்றும் உற்பத்தித் திறன் இழப்பை குறைப்பதற்கான தணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாநில அளவிலான வெப்ப அலை செயல்திட்டம் தயாரிக்கப்படும். அதனுடன் சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், சேலம், தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய 11 மாநகராட்சிகளுக்கான வெப்ப அலை செயல் திட்டங்களும் தனியாக தயாரிக்கப்படும்.
பேரிடர் அபாயத்தை திறம்பட மேலாண்மை செய்து, அதன் தாக்கத்தைக் குறைக்க முதல்நிலை மீட்பாளர்கள், களப்பணியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியோரின் திறன்களை மேம்படுத்த அதிநவீன வசதிகளுடன் கூடிய தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் ரூ.50 கோடியில் சென்னையில் அமைக்கப்படும். இதேபோல், `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் 2023-24 மற்றும் 2024-25-ம் ஆண்டுகளில் நடைமுறையில் உள்ள திட்டங்களில் மொத்தம் ரூ.14,520 கோடி மதிப்பிலான 1,266 திட்டப் பணிகள் எடுக்கப்பட்டன. அதில் இதுவரை 389 பணிகள் ரூ.2,246 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT