Published : 15 Mar 2025 02:29 AM
Last Updated : 15 Mar 2025 02:29 AM
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பணம் பெறாத, தகுதியுள்ள இல்லத்தரசிகள் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
பெண்களுக்கான ‘விடியல் பயணம்’ மூலம் தினமும் சராசரியாக 50 லட்சம் மகளிர், பேருந்து பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இத்திட்டத்துக்கு 2025-26-ம் ஆண்டில் ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு மாதமும் 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட’த்துக்கு நடப்பாண்டில் ரூ.13,807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.1000: மேலும், இதுவரை உரிமைத் தொகை பெறாத தகுதியுடைய இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் வழங்கப்படும். அதேபோல் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ், 4.06 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயனடைந்து வரும் நிலையில், அத்திட்டத்துக்காக நடப்பாண்டு ரூ.420 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் போல மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ரூ.1,000 வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் செயல்பட்டுவரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை அதிகரிக்கும் வகையில், நடப்பாண்டு 10 ஆயிரம் குழுக்கள் புதிதாக உருவாக்கப்படுவதுடன், சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணிபுரியும் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட ‘தோழி’ மகளிர் விடுதிகள் ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட 13 இடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் ரூ.77 கோடியில் கரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மேலும் 10 இடங்களிலும் அமைக்கப்படும்.
மாணவியர் விடுதிகள்: குக்கிராமங்களில் இருந்து உயர்கல்வி பயிலவரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவிகளுக்காக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும். மூத்த குடிமக்களின் பராமரிப்புக்காக மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் ரூ.10 கோடியில் 25 ‘அன்புச்சோலை’ மையங்கள் உருவாக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும் வகையில் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஊர்க்காவல் படையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
காலை உணவு திட்டம் விரிவாக்கம்: அரசு பள்ளிகளிலும், ஊரக பகுதிகளில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்பாட்டில் இருந்துவந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது, இந்த கல்வியாண்டு முதல் ரூ.600 கோடியில் நகர்ப்புற பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
அதேபோல் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்துக்காக ரூ.3,676 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த பட்ஜெட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.8,597 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT