Published : 14 Mar 2025 05:45 PM
Last Updated : 14 Mar 2025 05:45 PM
சென்னை: “ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்துக்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். போக்குவரத்துத் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுகையில், “தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்துக்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
கோவை மாநகரில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் அமைக்கப்படுவதற்கான பணி தொடங்கப்படும்.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திலுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான 15.46 கி.மீ. தூரத்துக்கு 9,335 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையிலான 2176 கி.மீ. தூரத்துக்கு 9,744 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பூந்தமல்லியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. தூரத்துக்கு 8,779 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் நீட்டித்திடும் வகையில், விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இவ்விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பினைப் பெறுவதற்காக விரைவில் அனுப்பப்படும்.
இதனைத் தொடர்ந்து, தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்துக்கும், கலங்கரை விளக்கத்திலிருந்து உயர் நீதிமன்றம் வரை 6 கி.மீ. தூரத்துக்கும் மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்.
தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி மற்றும் விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு, தலைநகர் புதுடெல்லி- மீரட் நகரங்களுக்கிடையே மித அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்கி இயக்கப்படுவதைப் போன்று. மண்டல விரைவுப் போக்குவரத்து அமைப்பு (Regional Rapid Transit System - RRTS)ஒன்றினை தமிழகத்திலும் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் மிக அதிவேக ரயில்வே (Semi High Speed Railway) அமைப்பினை பின்வரும் வழித்தடங்களில் உருவாக்கிட, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், மாமல்லபுரம், உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் அப்பகுதிகளில் நிலவும் நுண்ணிய சுற்றுச்சூழல் தன்மையை கருத்தில் கொண்டும் ரோப்வே (Ropeway) உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT