Published : 14 Mar 2025 06:05 PM
Last Updated : 14 Mar 2025 06:05 PM
சென்னை: 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்த நிலையில் அதனை கிண்டல் செய்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ள ட்வீட்கள் கவனம் பெற்றுள்ளன.
எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பகிர்ந்த ஒரு பதிவில், “இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்து சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு பதிவில் தமிழக பட்ஜெட்டை நேரலையில் மக்கள் காண ஏற்பாடு செய்திருந்த திரையின் முன்னால் காலியாக கிடந்த இருக்கைகளின் படத்தைப் பகிர்ந்து, “பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட்டும், இதுபோன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, “பல்வேறு திட்டங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதி பெயரை சூட்டினால் அது திமுகவின் வெற்றியாகி விடுமா? வெற்று விளம்பர திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுதான்.” என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பப்படி கைக் கணினி அல்லது மடிக்கணினி, பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000, சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் ,ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம், 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும், கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க, 14 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் படிப்படியாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ13,807 கோடி நிதி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. மேலும் வாசிக்க >> 1 லட்சம் புதிய வீடுகள் முதல் உரிமைத் தொகை விரிவாக்கம் வரை: தமிழக பட்ஜெட் 2025-26 முக்கிய அம்சங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT