Published : 14 Mar 2025 04:02 PM
Last Updated : 14 Mar 2025 04:02 PM
சென்னை: “மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,” தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசுகையில், “திராவிட மாடல் அரசு, மகளிரின் முன்னேற்றத்துக்குப் பல புதுமையான திட்டங்களைக் கடந்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் பதவியேற்ற நாளிலேயே கையெழுத்திட்ட முதல் ஐந்து கோப்புகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் ‘விடியல் பயணம்’ என்ற மகத்தான திட்டமும் ஒன்று.
தமிழக மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தின் மூலம், பேருந்துப் பயணம் செய்வோர்களில் பெண்களின் சதவீதம் 40 லிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினமும், சராசரியாக 50 லட்சம் மகளிர், பேருந்துகளில் இதுவரை 642 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மகத்தான இத்திட்டத்தினால் பெண்கள் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் சேமிக்க முடிகிறது என மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்துக்கான மானியத் தொகை 3,600 கோடி ரூபாயை 2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு ஒதுக்கியுள்ளது.
‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினால் பயன்பெறும் இல்லத்தரசிகளுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் கணிசமாக சேமிக்கவும் வழிவகுக்கிறது.
இதுவரை, மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். மகளிர் நலன் காக்கும் இத்திட்டத்துக்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், தற்போது நான்கு லட்சத்து ஆறாயிரம் மாணவியர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின் உயர்கல்வியில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை சென்ற கல்வியாண்டில் 19 சதவீதம் அதிகரித்து, கூடுதலாக 40,276 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். வரும் நிதியாண்டில் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT