Published : 14 Mar 2025 02:06 PM
Last Updated : 14 Mar 2025 02:06 PM
சென்னை: “அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, டாஸ்மாக் நிறுவனத்தில் எவ்வித தவறுகளும் நடைபெறவில்லை. எனவே, இதை டாஸ்மாக் நிறுவனம், தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழக பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை விளக்கம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழக அரசு மக்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதைப் பொறுத்துக் கொள்ளமுடியாது மத்திய அரசு, அமலாக்கத் துறையை ஏவி, டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
குறிப்பாக, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பல்வேறு முதல் தகவல் அறிக்கையில், பல்வேறு பிரிவுகளில் பதியப்பட்ட குற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், எந்த முதல் தகவல் அறிக்கை, எந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டது போன்ற விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. அதேபோல, பணியிட மாற்றங்கள் என்பது பணியாளர்களின் குடும்பச் சூழல், மருத்துவக் காரணங்கள் போன்ற அடிப்படை காரணங்களால் தான் டாஸ்மாக் நிறுவனத்தால் பணியிட மாற்றங்கள் வழங்கப்படுகிறது. அதில் எந்தவித தவறுகளும் இல்லை. ஆனால், அதில் தவறுகள் நடந்தது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
அதேபோல, போக்குவரத்து டெண்டரைப் பொருத்தவரைக்கும், வெளிப்படைத் தன்மையோடு கொடுக்கப்பட்ட ஒரு டெண்டர். அதில் எந்தவிதமான முறைகேடுகளோ, மாற்றுக் கருத்துகளுக்கோ இடமில்லை. அதில், அமலாக்கத் துறை ஆவணங்களை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கும், பாட்டில் கொள்முதல் ஆலைகளுக்கும் இடையே நடக்கக்கூடியவை அவர்கள் இருவரது வணிகம் சம்பந்தப்பட்ட விவகாரம். அதாவது எங்களது டாஸ்மாக் நிறுவனத்துக்கு வெளியில் நடப்பது. ஒரு நிறுவனம் பல்வேறு அரசு துறைகளில் டெண்டர் எடுக்கலாம். அதற்கான பணிகளைச் செய்யலாம். ஆனால், மதுபான உற்பத்தி மற்றும் பாட்டில் ஆலை நிறுவனங்களுக்கு இடையிலான வரவு செலவுகளை, ஏதோ டாஸ்மாக் நிறுவனத்தால், கூடுதலான கொள்முதல் ஆர்டர்களை வழங்கியது போல ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்த 4 ஆண்டு காலத்தில் டாஸ்மாக் நிறுவனத்தைப் பொறுத்தவரை, பார்களுக்கான டெண்டர் முழுவதுமாக ஆன்லைன் டெண்டராக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் எண்ட் டூ எண்ட் ஐப் பொருத்தவரை 24 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. பிற மாவட்டங்களில் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
எனவே, அமலாக்கத் துறை பொதுவாக சொல்லியிருக்ககூடிய அந்த ரூ.1,000 கோடி முறைகேடு என்பது எந்தவித முகாந்திரமும் இல்லாமல், பொத்தாம் பொதுவாக அதுபோன்ற கருத்துகளை கூறியிருக்கின்றனர். இந்த ஆயிரம் கோடி முறைகேடு குறித்து அமலாக்கத் துறை அறிவிப்புக்கு முன்னதாகவே ஒருவர் கூறுகிறார். அவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். அவர் பேட்டியளித்து போலவே, ஆயிரம் கோடி முறைகேடு என்ற கருத்தை அமலாக்கத் துறையும் முன்வைக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது.
அமலாக்கத் துறை சோதனைகள் என்பதை, டாஸ்மாக் நிறுவனமும், தமிழக அரசும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை, உள்நோக்கம் கற்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் டாஸ்மாக்கில் ரூ.40,000 கோடி முறைகேடு என்று கூறியிருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் என்ன நடைமுறைகள் இருந்ததோ, அந்த நடைமுறைகள் எல்லாம் தற்போது மெருகேற்றப்பட்டு கூடுதல் முயற்சிகளுடன் டாஸ்மாக் நிறுவனம் புதுப்பொலிவுடன் செயல்படுகிறது. எனவே, எந்தவிதமான தவறுகளுக்கும் இடமில்லாமல் வெளிப்படைத் தன்மையோடு செயல்படுகிறது.
கொள்முதலைப் பொறுத்தவரை, கடைசி மூன்று மாதங்கள் என்ன விற்பனை நடந்துள்ளது, அதிலும் கடைசி மாதத்தில் என்ன விற்பனை நடந்துள்ளது, இவை இரண்டுக்குமான சராசரியை எடுத்து அதன்படிதான் கொள்முதலுக்கான உத்தரவுகளை டாஸ்மாக் நிறுவனம் வழங்குகிறது. இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே, யாருக்கும் இந்த கொள்முதலைப் பொறுத்தவரை சலுகைகள் காட்டப்படுவதில்லை. அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, டாஸ்மாக் நிறுவனத்தில் எவ்வித தவறுகளும் நடைபெறவில்லை. எனவே, இதை டாஸ்மாக் நிறுவனம், தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT