Published : 14 Mar 2025 01:59 PM
Last Updated : 14 Mar 2025 01:59 PM

“திமுக அரசு தொடர தார்மிக உரிமை கிடையாது” - வெளிநடப்பு செய்த வானதி சீனிவாசன் கருத்து

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை கூறி உள்ள நிலையில், இந்த திமுக அரசு தொடருவதற்கு தார்மிக உரிமை கிடையாது என்றும், பட்ஜெட் தாக்கல் செய்ய அருகதை கிடையாது என்றும் கூறி பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை தாக்கல் செய்தார். இதை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டமன்ற வளாகத்தில் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, வானதி சீனிவாசன் கருப்பு உடை அணிந்து வந்ததற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், "இரண்டு காரணங்களுக்காக இன்று நான் கருப்பு உடை அணிந்து வந்துள்ளேன். டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எனவே, மாநில அரசு தொடருவதற்கு தார்மிக உரிமை கிடையாது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கும் அருகதை கிடையாது.

ரூபாய் சின்னத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி எழுதி இருக்கிறார். நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அடையாளத்தை, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் அடையாளத்தை, தமிழரால் உருவாக்கப்பட்ட ஓர் அடையாளத்தை இழிவுபடுத்தும் விதமாக தமிழ் மொழி எனும் பெயரில் மக்களை திசை திருப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் நிகழ்ந்துளள ரூ.1000 கோடி முறைகேடு, சட்டம் - ஒழுங்கு, லஞ்சம், ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவை காரணமாக இந்த அரசாங்கத்தின் மீது மக்களின் கோபம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் இம்மாதிரி நாடகத்தை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

திமுக தேசிய ஒருமைப்பாடு தொடர்பாக என்னவெல்லாம் பேசியது என்பது வரலாறு. ஆனால், மாநில அரசின் தோல்வியை மறைக்க முதல்வரே ரூபாய் சின்னத்தை மாற்றுகிறார். எனவே, திமுக தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையை நாங்கள் புறக்கணிக்கிறோம்" என தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், "தமிழகத்துக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தரக்கூடிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ. 30 வரை சட்டவிரோதமாக பணம் பெற்றிருக்கிறார்கள். ரூ.1000 கோடி ஊழல் என அமலாக்கத் துறை சொல்கிறது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ தெரியவில்லை. எனவே, இதைக் கண்டித்து நாங்கள் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

ரூபாய் சின்னம் கொண்டுவரப்பட்டபோது திமுக ஏன் எதிர்க்கவில்லை? ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை, ரூபாய் சின்னம் போன்ற விவகாரங்களை திமுக கையில் எடுத்திருக்கிறது" என குற்றம் சாட்டினார்.

முன்னதாக, தமிழ்நாடு மதுபான கழகத்தில் நடைபெற்ற சுமார் 1,000 கோடிக்கு மேலான ஊழல் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானத்தை வானதி சீனிவாசன் இன்று அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x