Published : 14 Mar 2025 11:53 AM
Last Updated : 14 Mar 2025 11:53 AM

''இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று நினைக்கவில்லை'' - ரூபாய் குறியீட்டை வடிவமைத்த தமிழர் பேட்டி

சென்னை: மத்திய அரசால் ஏற்கப்பட்ட ரூபாய் குறியீடு விஷயத்தில் இப்படி ஒரு சர்ச்சை நடக்கும் என்று தான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று அதனை வடிவமைத்த தமிழரான டி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். நீங்கள் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை தமிழக அரசு நிராகரித்திருப்பது உங்கள் பணிக்கு நேர்ந்த அவமானமாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த உதயகுமார், “எங்கள் அனைத்து வடிவமைப்புகளும் வெற்றிகரமானதாகவோ அல்லது பாராட்டத்தக்கதாகவோ இருக்காது. விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்வது இயல்பானதே. ஒரு வடிவமைப்பாளராக, நீங்கள் எப்போதும் அவற்றை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலமே முன்னேறிச் செல்ல முடியும். எனவே, இந்த நடவடிக்கையை அவமரியாதையாகவோ அல்லது எனது பணியை புறக்கணிப்பதாகவோ நான் பார்க்கவில்லை.” என்று கூறினார்.

மேலும் அவர், "அப்போது கையில் உள்ள பணியைப் பற்றி மட்டுமே நான் கவலைப்பட்டேன். காலத்தின் அவசரம் கருதி அதை நிறைவேற்ற முயற்சித்தேன். உலகளாவிய மற்றும் எளிமையான ஒன்றை உருவாக்கவும் விரும்பினேன். அது தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு, அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இன்று இப்படி அது சர்ச்சையாகும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

பின்னணி: தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில், மத்திய அரசின் ரூபாய் குறியீட்டை மாற்றி, ‘ரூ’ என்ற தமிழ் எழுத்துடன் கூடிய இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற வாசகத்துடன் ‘சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட’ என குறிப்பிட்டு, ரூபாய் குறியீடுக்கு பதிலாக ‘ரூ’ என்ற இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டார்.

இந்திய ரூபாய்க்கென தனிக்குறியீடு கடந்த 2010-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதை வடிவமைத்தவர் தமிழரான உதயகுமார் ஆவார். இவர், ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.

அவர் வடிவமைத்த ரூபாய் குறியீடு, இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இதுவரை பட்ஜெட்டில் அந்த குறியீடே பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டுகூட தமிழக பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு பட்ஜெட் இலச்சினை ‘ரூ’ என மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது.

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்தச் சூழலில், ரூபாய் குறியீடு பட்ஜெட் இலச்சினையில் மாற்றப்பட்டிருப்பதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், தேசிய ரூபாய் குறியீட்டை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல்முறை என்றும், மத்திய அரசின் மீதான எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழகத்தின் 2025-26-ம் ஆண்டுகான பட்ஜெட் இலச்சினையில், ரூபாய் அடையாள குறியீடு மாற்றப்பட்டுள்ளது. தமிழரான உதயகுமாரால் வடிவமைக்கப்பட்ட குறியீடு, முழு பாரதத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரூபாய் தாள் மற்றும் நாணயத்தில் இணைக்கப்பட்டது. உதயகுமார் முன்னாள் திமுக எம்எல்ஏ-வின் மகன்’ என குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “முதல்வர் ஸ்டாலின் தனது பெயரை முதலில் தமிழ் பெயராக மாற்றிக் கொள்ளட்டும். திமுக அரசின் அனைத்து தோல்விகளையும் மறைக்க இந்த நாடகம் தொடர்கிறது. திமுக எப்போதும் பிரிவினைவாதத்தையும், தேச விரோத மனநிலையையும் பேசுகிறது.” என தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x