Published : 14 Mar 2025 11:38 AM
Last Updated : 14 Mar 2025 11:38 AM
சென்னை: பருவநிலை மாற்றத்திலிருந்து மீட்கும் தன்மையுடைய ஏழு மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) சென்னை பெருநகரப் பகுதியில் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும், என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் சென்னைக்கான பல்வேறு திட்டங்களும் தமிழக பட்ஜெட் 2025-26-ல் இடம்பெற்றுள்ளன.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். நகராட்சி நிருவாகத்துறையின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 4,132 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக, வரும் நிதியாண்டில் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்துக்கு ஒரு மேம்பாலம் 310 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அதேபோன்று ரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு (Bio CNG) நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் (Automatic Material Recovery Facility) மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி 3,450 கோடி ரூபாய் திட்டக் காலத்துக்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
இதைப் போன்று, திறன்மிக்க திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சார உற்பத்தி செய்யும்பொருட்டு, சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு அருகிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குப் பயன்படும் வகையில், திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை (Waste to Energy Plant) தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் நிறுவப்படும். இத்திட்டத்தின் கீழ் 1,500 டன் மறுசுழற்சி செய்ய இயலாத திடக்கழிவின் செயலாக்கம் மூலம் தினந்தோறும் 15 முதல் 18 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும்.
நகர்ப்புரங்களில் வசிக்கும் மக்களுக்குத் தூய்மையான மற்றும் பசுமையான வாழிடச் சூழலை உருவாக்கும் பொருட்டு, அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. முப்பது மாத காலத்துக்குள் பணி நிறைவடையக் கூடிய இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சைதாப்பேட்டை முதல் திரு.வி.க.பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்படும். பருவநிலை மாற்றத்திலிருந்து மீட்கும் தன்மையுடைய ஏழு மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) சென்னை பெருநகரப் பகுதியில் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஐந்து நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மூன்று கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஒவ்வொரு குடிநீர் நிலையத்தில் இருந்தும் குடிநீர் விநியோகம் நகரின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பிரதானக் குழாய்கள் மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால், தேவைப்படும்போது ஒரு பகுதியின் உபரி நீரை, பற்றாக்குறை உள்ள மற்றொரு பகுதிக்கு மாற்ற இயலவில்லை. எனவே, முதன்மைச் சுற்றுக் குழாய் திட்டம் எனும் புதிய திட்டத்தின் மூலம் அனைத்து நீர்ப்பகிர்மான நிலையங்களையும் இணைத்து, சென்னை மாநகரில் உள்ள அனைத்து குடிநீர் விநியோக நிலையங்களுக்கும் சமமான அளவில் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். சமச்சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்திடும் இத்திட்டம் 2,423 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த 3 ஆண்டு காலத்திற்குள் நிறைவேற்றப்படும்” என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT