Published : 13 Mar 2025 08:46 PM
Last Updated : 13 Mar 2025 08:46 PM
சென்னை: “ரூபாய் குறியீடான ‘₹’ என்ற இந்தக் குறியீடு ஒரு மதத்தையோ, மொழியையோ குறிக்கவில்லை. தமிழன் கண்டுபிடித்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்து, உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்த இந்தச் செயலை அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் அரசு, அந்த இலச்சினையை மாற்றியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கே ஏற்படுத்திய அவமானமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல்” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் 2025-2026-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் மத்திய அரசின் ரூபாய் குறியீட்டை மாற்றி 'ரூ' என்ற தமிழ் எழுத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் லோகோ வெளியிட்டுள்ளார். ரூபாய் குறியீடு பயன்பாட்டுக்கு வந்த பிறகு அதுவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 'ரூ' என மாற்றப்பட்டுள்ளது.
டாலர், யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. இந்த வரிசையில் இந்திய ரூபாயும் சேர்ந்தது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார் வடிவமைத்த நிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்து அரசுப் பயன்பாட்டில் சேர்த்தது. ரூபாய்க்கான புதிய குறியீடு 2010-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அடையாள சின்னத்தை மாற்றியதன் மூலம் திமுக அரசின் சுயநல பிரிவினைவாத அரசியல் அப்பட்டமாக தெரிகிறது.
இந்த மோசமான அரசியல் தமிழக மக்களுக்கு ஆபத்தை தான் கொண்டு வரும். அடையாளத்தை மாற்றுவது மட்டும் தான் திமுக அரசுக்கு கை வந்த கலை. திருவள்ளுவர், ஒளவையார், வள்ளலார் என்று அனைவரையும் பாதிரியார் போல் வெள்ளையாக அடையாளம் மாற்றியது, பாரதியாரின் நெற்றியை வெறுமை ஆக்கியது என்று இவர்களின் அரசியல் ஆட்டத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது. ரூபாய் என்ற சொல், சமஸ்கிருதத்தில் உள்ள 'ருப்யா' என்ற சொல்லில் இருந்து வந்தது.
ரூபாய் குறியீடான ₹ என்ற இந்த குறியீடு ஒரு மதத்தையோ, மொழியையோ குறிக்கவில்லை. தமிழன் கண்டுபிடித்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்து, உலக அளவில் இந்தியாவை தலைநிமிரச் செய்த இந்த செயலை அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் அரசு இதை செய்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கே ஏற்படுத்திய அவமானமாகும். இது வன்மையாக கண்டிக்க தக்க செயல். திமுக அரசின் இந்த செயல் மக்களை திசை திருப்பி, ஏமாற்றி, பொய் சொல்லி அதன் மூலம் தமிழை வைத்து பிழைப்பு நடத்தி வியாபாரம் செய்யப் பார்க்கிறது.
ஏன் மாற்ற வேண்டும்? மாற்ற வேண்டிய அவசியம் என்ன? தேவை என்ன இருக்கின்றது? இதன் உள்நோக்கம் என்ன? இதனால் மக்கள் குழம்பி போய் உள்ளனர். இந்த குழப்பத்திற்கு என்ன காரணம் என்று தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற புதுமையான செயல்களை திணிப்பதாள் தங்கள் மீதுள்ள குறைகளை போக்கி விடலாம் என்று திராவிட மாடல் அரசு எண்ணிக் கொண்டுள்ளது. இதற்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT