Last Updated : 12 Mar, 2025 05:05 PM

 

Published : 12 Mar 2025 05:05 PM
Last Updated : 12 Mar 2025 05:05 PM

“தமிழகத்தின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராட மக்கள் முன்வர வேண்டும்” - முத்தரசன்

முத்தரசன் | கோப்புப்படம்

விருதுநகர்: “மத்திய ஆட்சி ஜனநாயக ஆட்சி அல்ல. தமிழக மக்கள் இத்தகைய அரசியலை புரிந்துகொண்டு தமிழகத்தின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகரில் இன்று (மார்ச் 12) அவர் அளித்த பேட்டியில் கூறியது: “தமிழகத்தில் உள்ள கல்வி முறையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சிதான். காரணம் பிஞ்சு மனதில் தோல்வி என்ற பாதிப்பும், கல்வியை பாதியில் விட்டுவிடக் கூடாது என்பதற்காக இக்கொள்கை பின்பற்றப்படுகிறது. மத்திய அரசு கொண்டுவரும் கல்விக் கொள்கையில் 3 வயதில் பள்ளியில் குழந்தையை சேர்க்க வேண்டும்.

பின்னர், 3,5,8,10, 12-ம் வகுப்பு வரை பொதுத் தேர்வு. அதன்பின், கல்லூரியில் சேரவும் ஒரு நுழைவுத் தேர்வு. இது ஆர்எஸ்எஸ் கொள்கை. மனுதர்மத்தை ஏற்றுக் கொண்டது. இதை மறைமுகமாக அமல்படுத்துவதான் தேசியக் கல்விக் கொள்கை. தமிழகத்தில் இருமொழி பின்பற்றப்படுகிறது. மூன்றாதுவது மொழியை ஏற்க வேண்டும் என்பதுதான் தேசியக் கல்விக் கொள்கை. இதை ஏற்கவில்லையெனில் ரூ.2 ஆயிரம் கோடியை வழங்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். முதலில் இதை அரசியல் ஆக்கியது அவர்தான்.

நாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் இதை கண்டித்துப் பேசி நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் பேசுகையில் மிக மோசமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தரம்தாழ்ந்த முறையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களை அவமதித்து பேசியுள்ளார். கடும் எதிர்ப்புக்குப் பிறகு யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இவ்வாறு திருப்பி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு தகுதியில்லதவர் எனத் தெரிகிறது. அவர் பதவி விலக வேண்டும். அவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும்.

தமிழக தலைமை செயலாளர் எழுதிய கடிதத்தில், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து குழு அமைக்கப்படும் என்றுதான் கூறியுள்ளார். அதன்பின் முதல்வர் எழுதிய கடிதத்தில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படியில்தான் நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறுகிறார். இது பொய். தற்போது 543 எம்.பிக்கள் உள்ள நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 888 இருக்கைகளை ஏன் ஏற்பாடு செய்ய வேண்டும்? உள்நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது.

எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் தமிழகத்துக்கு 10 எம்.பிக்கள் தொகுதி கூடும். ஆனால், உ.பி.யில் 55 ஆக உயர்த்தப்படும். எனவே, எம்.பிக்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டாம். மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி சீரமைப்பு என்ற பெரியரில் தொகுதிகளையும் குறைக்கக் கூடாது. மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டக் கூடாது. தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கல்விக்கான நிதி, இயற்கை பேரிடர் நிதி, மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ரூ.1.631 கோடியும் வழங்கப்படவில்லை.

பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது. மத்திய அரசு உள்நோக்கத்தோடு தமிழத்தை புறக்கணிக்கும் கொள்கையை பின்பற்றி வருகிறது. இது ஜனநாயக நாடா என கேட்கத் தோன்றுகிறது. மத்திய ஆட்சி ஜனநாயக ஆட்சி அல்ல. தமிழக மக்கள் இத்தகைய அரசியலை புரிந்துகொண்டு தமிழகத்தின் உரிமைக்காக ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x