Published : 12 Mar 2025 09:54 AM
Last Updated : 12 Mar 2025 09:54 AM
கழகத்தின் கட்டுமான சீரமைப்பு நடவடிக்கையாக இரண்டாக இருந்த திருப்பூர் மாவட்ட திமுக-வை நான்காக பிரித்திருக்கிறார் ஸ்டாலின். இதனால், உற்சாகமடைவதற்குப் பதிலாக ஏகத்துக்கும் குழம்பிப் போய்க்கிடக்கிறார்கள் திருப்பூர் திமுக-வினர்.
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகள். இதில் அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு தொகுதிகள் இன்றளவும் அதிமுக கோட்டையாகவே இருக்கின்றன. உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் அதிமுகவே வென்றது. திருப்பூர் தெற்கு, தாராபுரம், காங்கயம் மட்டுமே இப்போது திமுக வசம்.
இதற்கு முன்பு திருப்பூர் வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களாக இருந்தது திருப்பூர் திமுக. வடக்கு மாவட்டத்துக்கு க.செல்வராஜும், தெற்கு மாவட்டத்துக்கு இல.பத்மநாபனும் செயலாளர்களாக இருந்தார்கள். இருப்பினும் திருப்பூர் தெற்கு தொகுதிக்கு எம்எல்ஏ-வாக இருக்கும் செல்வராஜை ஒதுக்கிவிட்டு காங்கயத்தில் வென்ற முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனை அமைச்சராக்கியது தலைமை. அது முதலே இருவருக்கும் ஏழாம் பொருத்தம் என்பார்கள்.
இதனால் இப்போது, யாருக்கும் பிரச்சினையே வேண்டாம் என்று சொல்லி திருப்பூர் மாவட்ட திமுக-வை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என திசைக்கு ஒன்றாக பிரித்துவிட்டது திமுக தலைமை. இதில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக செல்வராஜையும், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் மு.பெ.சாமிநாதனையும் நியமித்திருக்கிறார்கள்.
வடக்கு மாவட்டத்துக்கு தினேஷ்குமாரும் தெற்கு மாவட்டத்துக்கு இல.பத்மநாபனும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் இனி எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என தலைமை நினைத்துக் கொண்டிருக்க, பொறுப்புகளைப் பெற்ற நான்கு பேருமே நிம்மதியில்லாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக பேசிய திருப்பூர் திமுக-வினர், “நான்கு பேரையும் மாவட்டப் பொறுப்பாளர்களாக அறிவித்ததுமே இவர்களுக்குத்தான் தலைமை சீட் கொடுக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட கட்சிக்காரர்கள் சலிப்பில் இருக்கிறார்கள். பதவி பெற்றவர்களும் அத்தனை திருப்தியாக இல்லை என்பது தான் நிஜம். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளை கேட்டு கடந்த முறையே கம்யூனிஸ்ட்கள் மோதினர். இம்முறையும் அவர்கள் போட்டிக்கு வருவார்கள். அதனால், தனக்கு சீட் இல்லாமல் போய்விடுமோ, அதற்காகத் தானோ மாவட்டச் செயலாளர் பொறுப்பு தந்திருக்கிறது தலைமை
என்ற சந்தேகத்தில் இருக்கிறார் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ-வான செல்வராஜ். ஒருவேளை, பல்லடம் தொகுதியில் சீட் கொடுத்தால் அதிமுக கோட்டையை வெல்லமுடியுமா என்ற சந்தேகமும் அவரது கலக்கத்துக்குக் காரணம். கடந்த முறை தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணியிடம் தோற்ற கார்த்திகேய சிவசேனாபதி இம்முறை காங்கயத்தில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறார்.
ஒருவேளை, அவர் நினைத்தது நடந்தால் அமைச்சர் சாமிநாதன் மடத்துக்குளத்துக்கு தடம்மாற வேண்டி இருக்கும். ஆனால், அங்கேயும் முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் மகள் தொகுதியை பிடிக்க முழு வீச்சில் காய் நகர்த்தி வருகிறார். இதனால், சாமிநாதனுக்கும் தர்மசங்கடமான நிலை.
தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன், உடுமலைக்கு குறிவைக்கிறார். அதுவும் அதிமுக வலுவாக இருக்கும் தொகுதி.
கடந்தமுறை, மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ-வான ஜெயராமகிருஷ்ணன் உள்ளடிகளால் தோற்கடிக்கப்பட்டார். அப்படி இருக்கையில், உடுமலையில் ஜெயராமகிருஷ்ணன் விசுவாசிகள் பத்மநாபனை அத்தனை எளிதில் பட்டம் சூடவிடுவார்களா என்றும் தெரியாது.
தேமுதிக வரவான வடக்கு மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் இப்போது திருப்பூருக்கு மேயராகவும் இருக்கிறார். தலைவர் குடும்பத்துக்கு நெருக்கமான தொழிலதிபரின் ‘நல்லாசியுடன்’ திமுக-வுக்குள் தான் நினைத்ததை எல்லாம் சாதித்து வரும் தினேஷ், நிச்சயம் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு வரிந்து கட்டுவார்.
ஆனால், திமுக-வுக்கு வந்த பிறகும் தாய்கழகத்து நண்பர்களுக்கே முக்கியத்துவம் அளித்து வரும் தினேஷ்குமாரை பரம்பரை திமுக-வினர் சற்று வித்தியாசமாகவே பார்க்கிறார்கள்” என்றார்கள். ஆக மொத்தத்தில், மாவட்டப் பிரிவினையால் தெளிவு பிறப்பதற்குப் பதிலாக திருப்பூர் திமுக-வில் குழப்பங்களே மிஞ்சி நிற்கின்றன!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT