Published : 11 Mar 2025 11:09 AM
Last Updated : 11 Mar 2025 11:09 AM
முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க முயன்ற அதிமுக நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேடையிலேயே கன்னத்தில் அறைந்ததும், சிவகாசியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பாண்டியராஜனை பெயர் குறிப்பிடாமல் ஒருமையில் சாடியதும் விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் புகைந்து கொண்டிருந்த கோஷ்டி பூசலை வீதிக்கு கொண்டு வந்திருக்கிறது.
விருதுநகர் அதிமுக-வில் விருதுநகர் மேற்கு மாவட்டத்திற்கு ராஜேந்திர பாலாஜியும், கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் தம்பி ரவிச்சந்திரனும் மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர். விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தாலும் ஒன்றுபட்ட விருதுநகர் மாவட்ட அதிமுக-வின் முகமாகவே இருப்பவர் ராஜேந்திர பாலாஜி.
2011-ல் விருதுநகரில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக நின்று வெற்றிபெற்ற மாஃபா பாண்டியராஜன், பிறகு அதிமுக-வில் இணைந்தார். இதையடுத்து 2016-ல் சென்னை ஆவடியில் போட்டியிட்டு அமைச்சரானார். 2021-ல் மீண்டும் ஆவடியில் போட்டியிட்ட பாண்டியராஜன் தோற்றுப் போனார்.
இதையடுத்து மீண்டும் சொந்த ஊர் பக்கமே திரும்பிய பாண்டியராஜன், 2026-ல் மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் அரசியல் செய்து வருகிறார். இதுதான் அவர் மீது ராஜேந்திர பாலாஜிக்கு எரிச்சலை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில், மார்ச் 5-ம் தேதி விருதுநகர் பொதுக்கூட்டத்தில் பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க முயன்ற அதிமுக நிர்வாகியை ராஜேந்திர பாலாஜி, “மாவட்டச் செயலாளர் யாருன்னு உனக்கு தெரியாதா?” எனக் கேட்டு கன்னத்தில் அறைந்தார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் 7-ம் தேதி சிவகாசியில் நடந்த கூட்டத்தில், “பல கட்சிகளுக்கு போய் வந்தவன் நீ. என்னை மீறி விருதுநகரில் உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று பாண்டியராஜனை பெயர் குறிப்பிடாமல் தாக்கினார் ராஜேந்திர பாலாஜி. இதன் பின்னணி குறித்து விவரித்த விருதுநகர் மாவட்ட அதிமுக-வினர், “விருதுநகர் மாவட்டத்தில் தான் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறார் ராஜேந்திர பாலாஜி.
இவரது தாம் தூம் அரசியலை சகித்துக் கொள்ளமுடியாமல் கட்சிக்குள் பலபேர் சைலன்ட் ஆகிவிட்டார்கள். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாவட்டத்தை விட்டே மதுரைக்குப் போய்விட்டார். இது புரியாத பாண்டியராஜன், விருதுநகர் அரசியலுக்கு திரும்பினார். விருதுநகர், திருச்சுழி தொகுதிகளை பிரித்து புதிதாக ஒரு மாவட்டத்தை உருவாக்கி அதற்கு பாண்டியராஜன் செயலாளராகப் போவதாகக் கூட செய்திகள் வந்தது.
இதையெல்லாம் ராஜேந்திர பாலாஜி ரசிக்கவில்லை. சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர், மேடையிலேயே அதிமுக நிர்வாகியை அடித்து பாண்டியராஜனை மறைமுகமாக மிரட்டினார். இதையெல்லாம் அப்படியே தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்ற பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர் போல் செயல்படுவதாக வருத்தப்பட்டிருக்கிறார். இதை தெரிந்து கொண்ட பாலாஜி, பொதுக்கூட்ட மேடையிலேயே பாண்டியராஜனை ஒருமையில் பேசி ஆத்திரப்பட்டுவிட்டார்” என்கிறார்கள்.
ராஜேந்திர பாலாஜியின் பேச்சு குறித்து மாஃபா பாண்டியராஜனிடம் கேட்டதற்கு, “இப் பிரச்சினை குறித்து நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை” என்று முடித்துக் கொண்டார். ராஜேந்திர பாலாஜியோ நமது அழைப்பை ஏற்கவே இல்லை. 2011-ல் திருச்சுழியை தவிர்த்து மாவட்டத்தில் உள்ள எஞ்சிய 6 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வென்றது.
கடந்த தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூரை தவிர்த்து எஞ்சிய 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றது. அடுத்த தேர்தலில் மொத்தமாக 7 தொகுதிகளையும் வென்றெடுக்க வேண்டும் என இரண்டு அமைச்சர்களுக்கு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறது திமுக. இந்த நிலையில், இவர்கள் இருவரும் இப்படி மோதிக்கொள்வது கட்சிக்கு அத்தனை நல்லதாக படவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் விருதுநகர் மாவட்ட அதிமுக-வினர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT