Published : 10 Mar 2025 07:26 PM
Last Updated : 10 Mar 2025 07:26 PM

“தமிழக மக்களிடம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்புக் கேட்க வேண்டும்” - பெ.சண்முகம்

பெ.சண்முகம் | கோப்புப்படம்

சென்னை: “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ஆணவப் போக்குக்காக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்பதுடன், மாநிலத்துக்கு தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் மீது மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக திணிப்பதை நியாயப்படுத்தியதுடன், மாநிலத்தின் நிதி உரிமையை வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆணவமாகப் பேசியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் தமிழகம் ஏற்க மறுத்தால் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை வழங்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே கூறியிருந்தார்.

அரசியல் சட்டத்துக்கு விரோதமான இந்தப் போக்கை கண்டித்தும், தமிழகத்தின் நிதி உரிமை, கல்வி உரிமையை வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், தமது தேவைக்கேற்ற விதத்தில் கல்விக் கொள்கையையும், மொழிக் கொள்கையையும் தீர்மானிக்கும் உரிமை உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற மொழிப் போராட்டத்தை தொடர்ந்து, இருமொழிக் கொள்கை உறுதிசெய்யப்பட்டது. ஆனால், ஒற்றை ஆட்சிக் கொள்கையோடு ஆணவமாகச் செயல்படும் பாஜக, தமிழகத்துக்கு நிதியை மறுப்பதன் மூலம் மொழிக் கொள்கையை திணிக்கப் பார்க்கிறது.

அதன் வெளிப்பாடாகவே, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்திய மத்திய அமைச்சர், தமிழகத்தின் மக்கள் பிரதிநிதிகளை நாகரிகமற்றவர்கள் என்று ஆணவமாக பேசியுள்ளார். பலதரப்பு கண்டனத்துக்குப் பிறகு இந்தப் பேச்சை அவர் திரும்பப் பெற்றாலும் அது மட்டுமே போதுமானதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ஆணவப் போக்குக்காக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்பதுடன், மாநிலத்துக்கு தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x