Published : 10 Mar 2025 04:15 PM
Last Updated : 10 Mar 2025 04:15 PM

வானிலை முன்னறிவிப்பு: நெல்லை, குமரி உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்

சென்னை: தமிழகத்தில் மார்ச் 11 ஆம் தேதி (நாளை) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மார்ச், 10 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உள்தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். மார்ச், 11 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச், 12 ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மார்ச், 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: மார்ச், 10,11 ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: மார்ச், 10,11 ஆம் தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். மார்ச் 12 முதல் மார்ச் 14 வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 33 - 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 - 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: மார்ச், 10,11 ஆம் தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மார்ச், 12 ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மார்ச், 13 ஆம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்: மார்ச், 10 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மார்ச், 11 ஆம் தேதி முதல் மார்ச், 14 ஆம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்: மார்ச், 10 ஆம் தேதி எச்சரிக்கை ஏதுமில்லை. மார்ச் 11 ஆம் தேதி தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும், தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு – மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x