Published : 10 Mar 2025 12:56 AM
Last Updated : 10 Mar 2025 12:56 AM
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை நங்கநல்லூரில் பாஜக மண்டல் அலுவலகத்தை நேற்று எல்.முருகன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ரயில்வே, வங்கி, யுபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் தமிழில் எழுத பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது. ஐநாவில் முதன் முதலில் தமிழ் குரல் கேட்டது என்றால் அது பிரதமர் மோடியால் தான். கிட்டத்தட்ட 35 மொழிகளில் திருக்குறள் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் கலாச்சார மையங்கள், காசி தமிழ் சங்கம், இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு இருக்கை என தமிழுக்கு அதிகமாக பெருமை சேர்ப்பது பாஜக அரசுதான். காங்கிரஸ், திமுக, ஆட்சியில் இருந்தபோது, தமிழ் மொழிக்காக என்ன செய்தார்கள். ஆனால், உலகின் தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடி உலகம் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டை நடைபெறாமல் தடுத்தது, காங்கிரஸும் திமுகவும்தான். ஆனால், ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது பிரதமர் மோடி.
மேகதாது அணையை பொறுத்தவரை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து சுமூகமான முடிவை எடுப்பார்கள். மீனவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் வெறும் ரூ.400 கோடி மட்டுமே ஒதுக்கினார்கள். மேலும், பாஜக ஆட்சியில் மீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர்கள் எல்லை தாண்டி செல்லும்போது, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டால், உடனடியாக அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்துள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தமிழகத்தில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT