Published : 08 Mar 2025 06:24 PM
Last Updated : 08 Mar 2025 06:24 PM
நாமக்கல்: “குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்திட வைக்கிறார்கள்” என பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சனம் செய்தார்.
திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாங்கள் மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்க ஆசைப்படவில்லை. அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்க ஆசைப்படுகிறோம். இதுவரை கல்வி கற்ற அனைவரும் இரு மொழிக் கல்வியில்தான் கல்வி கற்றுள்ளோம். எதற்காக மாணவ, மாணவிகளுக்கு இதனை திணிக்க வேண்டும். அவர்கள் ஆசைப்பட்டால் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். இது கட்டாயமாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம்.
எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. ஆனால் இந்தியை ஏற்றுக் கொண்டால் தான் நாங்கள் பணம் தருவோம் என்று கூறுவது பிளாக் மெயில் ஆகும். கிருஷ்ணகிரியில் சாதி ரீதியாக பேசிய ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் முதல்வர் பல்வேறு ஆய்வகங்களையும், பள்ளி கட்டிடங்களையும் திறந்துள்ளார். ரூ.3,697 கோடி மதிப்பில் மேலும் பணிகள் நடைபெற்று வருகிறது வரும் 2027-க்குள் 18,000 கட்டிடங்கள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றுவது போல குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து பாஜகவினர் கையெழுத்திட வைக்கிறார்கள். தமிழக குழந்தைகள் நீட் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதனை கேட்டு நீங்கள் நீட்டை எடுத்து விட்டீர்களா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிகழ்வில், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT