Published : 08 Mar 2025 01:53 PM
Last Updated : 08 Mar 2025 01:53 PM
சென்னை: எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஜுரம் பரவி வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், மறைமுகமாக இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளில் இப்போதே உத்தேச வேட்பாளர் பட்டியலையும் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் மைக்கை பிடித்தாலே தேர்தல், கூட்டணி தொடர்பாகவே பேசி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிரணி சார்பில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளரிடம் கேட்டபோது முதலில், “தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.” என்றார். அதனைத் தொடர்ந்து, “அதிமுகவை பொறுத்தவரை கட்சி தொடங்கியதில் இருந்து இன்று வரை, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை பலம் பொருந்திய கட்சி. அதிமுகவை தோற்றுவித்ததில் இருந்து இன்று வரை கூட்டணி வைக்க தவம் கிடந்தது கிடையாது.” என்றார்.
‘கையெழுத்து இயக்கம் தொடக்கம்’ - சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அதிமுக மகளிர் அணியின் சார்பில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (சனிக் கிழமை), நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
பின்னர், தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பலூன்களைப் பறக்கவிட்டார். தொடர்ந்து, வெண்புறாக்களையும் பறக்கவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, 77 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கழக மகளிர் அணி நிர்வாகிகளுக்கும், வீராங்கனைகளுக்கும். பத்திரிகையாளர்களுக்கும் வழங்கினார். முன்னதாக, மகளிர் அணிச் செயலாளர் பா. வளர்மதி தலைமையில், எடப்பாடி பழனிசாமிக்கு, மகளிர் அணியினர் சாக்லேட் மாலை அணிவித்தனர். பின்னர், உலக மகளிர் தின சிறப்புப் பாடல் அடங்கிய குருந்தகடினை வெளியிட்டார் ஏழை, எளிய மகளிர் பயன்பெறும் வகையில், உதவிகளை வழங்கினார்.
நிறைவாக, ‘மகளிர் நலன் காக்க மாற்றம் வேண்டும்’ என கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கிவைத்து தானும் கையெழுத்திட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT