Published : 08 Mar 2025 09:47 AM
Last Updated : 08 Mar 2025 09:47 AM
புதுச்சேரியில் இதுவரையில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் தற்போதைய முதல்வர் ரங்கசாமி மட்டும் தான். அடுத்த தேர்தலிலும் முதல்வர் இருக்கையை தக்கவைத்து சாதனையை இன்னும் வலுவாக்க ரங்கசாமி போடும் கூட்டணிக் கணக்குகள் பாஜக-வை பதறவைத்திருக்கிறது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ரங்கசாமி இருக்கிறார். இருந்த போதும் அவரது பல கோரிக்கைகள் மத்திய அரசால் கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறது. அதேபோல், கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக எம்எல்ஏ-க்கள் வாரியத் தலைவர் பதவிகளை கேட்டு மனு போட்டும் மவுனமாகவே இருக்கிறார் ரங்கசாமி.
மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச டெல்லிக்குச் செல்லாத ரங்கசாமி, பிரதமர் மோடி பதவியேற்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டம் என அனைத்தையும் புறக்கணித்தே வருகிறார். பாஜக எம்எல்ஏ-க்கள் மூவரும், பாஜக ஆதரவு சுயேச்சைகள் மூவரும் ரங்கசாமியை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும், 2026-லும் ரங்கசாமியுடனான கூட்டணியை தொடர விரும்புகிறது டெல்லி பாஜக தலைமை.
ஆனால் ரங்கசாமியோ, தனது நண்பரான புஸ்ஸி ஆனந்த் மூலமாக வேறு கணக்குப் போடுகிறார். ஆனந்த் மூலமாக நடிகர் விஜய்யுடன் நட்பில் இருக்கும் ரங்கசாமி, விஜய் நடத்திய விக்கிரவாண்டி தவெக மாநாடு வெற்றிபெற புஸ்ஸி ஆனந்துடன் சேர்ந்து அப்பா பைத்தியம் சாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்து ஆசிர்வாதம் செய்தார்.
ரங்கசாமியின் அண்மைக்கால நகர்வுகள் அனைத்துமே விஜய் அரசியலை மையப்படுத்தியே இருப்பதால், இவரையும் விட்டுவிட்டு என்ன செய்வது என பதறிக் கிடக்கிறது புதுச்சேரி பாஜக வட்டாரம். “வரும் தேர்தலிலும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ரங்கசாமி தான் தலைமை ஏற்பார். முதல்வர் வேட்பாளரும் அவரே தான்” என பாஜக-வைச் சேர்ந்த பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்திருப்பதும் ரங்கசாமிக்கு அணைபோடத்தான் என்கிறார்கள்.
ஆனால் ரங்கசாமியோ வழக்கம்போல், “தேர்தல் சமயத்தில் கூட்டணி பற்றி பார்க்கலாம்” என நழுவி வருகிறார். பாஜக-வினரிடம் கேட்டால், “ரங்கசாமி எப்போதும் இப்படித்தான். அவர் எங்கள் கூட்டணியில் தான் இருப்பார்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள். புதுவையை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காரைக்காலை ஒட்டியுள்ள நாகை, மயிலாடுதுறை மற்றும் சேலம் ஆகிய தமிழக பகுதிகளில் தனது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளம் இருப்பதாக முதல்வர் ரங்கசாமி கருதுகிறார்.
இங்கெல்லாம் அவர் சார்ந்த வன்னியர் சமூகத்து மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்தே, “இம்முறை என்.ஆர்.காங்கிரஸ் தமிழகத்திலும் போட்டியிடும்” என ரங்கசாமி சொல்லி இருக்கிறார். விஜய்யுடன் இருக்கும் நெருக்கத்தை வைத்து புதுச்சேரியில் தவெக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை உருவாக்க நினைக்கிறார் ரங்கசாமி.
அந்தக் கூட்டணியில் புதுச்சேரியை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்களை களமிறக்கினால் ஒரு கை பார்க்கலாம் என்பதும் அவரது கணக்கு என்கிறார்கள். அவரின் இந்தத் திட்டம் கைகூடி வந்தால் மேற்சொன்ன மாவட்டங்களில் பாமக வாக்கு வங்கிக்கும் பங்கம் உண்டாக்கலாம் என்கிறார்கள்.
இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் பேசியவர்கள், “காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய போது அப்பா பைத்தியம் சாமியிடம் குறி கேட்டுத்தான் ரங்கசாமி முடிவெடுத்தார். அதேபோல், விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பது, தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸை காலூன்ற வைப்பது - இதெற்கெல்லாமும் குறிகேட்டுத்தான் முடிவெடுத்திருப்பார். ஆனாலும், அவர் என்ன நினைக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். கடைசி வரைக்கும் மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்றனர்.
ரங்கசாமி தமிழகத்துக்குள் தடம்பதிக்க வருவதால் பாமக-வுக்கு பாதிப்பு வரும் என்கிறார்களே என விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி பாமக எம்எல்ஏ-வான சி.சிவகுமாரிடம் கேட்டதற்கு, “மருத்துவர் ஐயா ராமதாஸ் 43 ஆண்டுகளாக 9 ஆயிரம் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்துள்ளார். அதனால் யார் இங்கு வந்தாலும் பாமக-வை வீழ்த்த முடியாது. பாமக-வின் வாக்குகள் பாமக-வுக்கே விழும். வரும் தேர்தலில் எங்களின் வாக்கு சதவீதம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை” என்றார்.
புதுச்சேரியில் பாமக காலூன்ற முடியாமல் இருப்பதற்கு ரங்கசாமியும் முக்கிய காரணம் என்பார்கள். அப்படி இருக்கையில், எல்லை கடந்து தமிழகத்துக்குள் தடம் பதிக்க நினைக்கும் ரங்கசாமியால் தமிழகத்திலும் பாமக வாக்கு வங்கிக்கு சேதாரம் வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT