Published : 08 Mar 2025 01:03 AM
Last Updated : 08 Mar 2025 01:03 AM

மருத்துவம், பொறியியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அமித்ஷா கோரிக்கை

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் மையத்தில் நேற்று நடைபெற்ற எழுச்சி தின விழாவில், சிறப்பாகப் பணிபுரிந்த வீரருக்கு பதக்கம் வழங்கிய வழங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. உடன், சிஐஎஸ்​எஃப் இயக்​குநர் ஜெனரல் ராஜ்​விந்​தர் சிங் பாட்டி.

தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவ பாடப்பிரிவுகளில் தமிழில் கல்வி கற்கும் நடைமுறையை, மாநில அரசு கொண்டுவர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் ராஜாதித்யா சோழன் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் 56 - வது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் எழுச்சி தின விழா வெகு விமரிசையாக நேற்று ( 7-ம் தேதி) கொண்டாடப்பட்டது. இதில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் ராஜ்விந்தர் சிங் பாட்டி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

தொடர்ந்து, அவர் திறந்தவெளி ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, குஜராத்தில் சிஐஎஸ்எப் வீரர்கள் குழுவினர் நேற்று தொடங்கிய மிதிவண்டி பேரணியை ( கோஸ்டல் சைக்ளோத்தான்) காணொலி காட்சி வாயிலாக இங்கிருந்து தொடங்கி வைத்தார். மேலும், சிறப்பாக பணியாற்றிய முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, "நாட்டின் பாதுகாப்பு பணியில் சிஐஎஸ்எப் வீரர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாட்டின் பாதுகாப்புத்துறை வரும் 2027-ம் ஆண்டுக்குள் உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடிக்கும் அளவிற்கு நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார். 14 ஆயிரம் சிஐஎஸ்எப் வீரர்கள் மற்றும் பிற பாதுகாப்பு துறையில் ஒரு லட்சம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ, விமான நிலையங்கள், அணுமின் நிலையம், நினைவுச் சின்னங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் இன்னும் 250 இடங்களில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ் , பெங்காலி ஆகிய மொழிகளில் தற்போது மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கான தேர்வுகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொறியியல் மற்றும் மருத்துவ பாடப்பிரிவுகளில் தமிழில் அவர்கள் கல்வி கற்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். வருங்காலத்தில் இந்த அரசு அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் என நம்புகிறேன். தமிழகத்தில் உள்ள மாணவர்கள் இதன் மூலம் மிகவும் பயன் பெறுவார்கள். இந்தியாவின் மரபுகள் மற்றும் கலாச்சாரத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் மொழி விளங்குகிறது. வீரமிக்க ராஜாதித்யா சோழன் நினைவாக அவரது பெயர் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மையத்துக்கு வைக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரிய விஷயமாகும். இது நமக்கு மேலும் பெருமை சேர்க்கிறது " என்றார்.

முன்னதாக நாட்டிலுள்ள பல்வேறு இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான குடியிருப்புகள், மருத்துவ கட்டிடம், மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தும், புதிய கட்டிடங்கள் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் எழுச்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு மலரை வெளியிட்டார். இறுதியாக சிஐஎஸ் எப் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில், வீரர்களின் யோகா பயிற்சி, தீவிரவாத தாக்குதலின் போது அதை எவ்வாறு எதிர் கொண்டு முறியடிப்பது, ஆயில் நிறுவனங்கள், காஸ் நிறுவனங்களில் தீப்பற்றி எரிந்தால் எப்படி விரைந்து தீயை அணைத்து, விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, வீட்டில் பதுங்கி இருப்பவர்கள், காரில் தப்பிச்செல்லும் தீவிரவாதிகளை எவ்வாறு வீரர்கள் விரட்டிச் சென்று பிடிக்கிறார்கள் என்பதை தத்ரூபமாக செய்து காட்டி, பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தனர். இதில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x