Published : 08 Mar 2025 12:46 AM
Last Updated : 08 Mar 2025 12:46 AM
நான் குறுநில மன்னன்தான், என்னை மீறி விருதுநகரில் உன்னால் என்ன செய்ய முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசி விமர்சித்தார்.
சிவகாசியில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தில் எனது வழக்கு நிலுவையில் உள்ளது. என் மீது சிபிஐ விசாரணை நடக்கிறது. இவ்வளவு பிரச்சினைக்கு மத்தியிலும் நான் கட்சிப் பணியாற்றி வருகிறேன். நான் நேதாஜி, பிரபாகரன் வரலாற்றைப் படித்து வளர்ந்தவன். எனக்கு பயமே கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியைப் பின்பற்றி பழனிசாமி தலைமையில் வழிநடப்பவன். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் இதே கட்சியில் இருப்பவன்நான்.
லண்டனில் படித்த சிலர் (மாஃபா பாண்டியராஜன்) என்னை குறுநில மன்னன் என்கிறார்கள். குறுநில மன்னன்தான் நான். என்னுடன் இருப்பவர்கள் வாளேந்தி வருவர். எங்களை அழிக்க, ஒடுக்க நினைப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் பேடிகள் அல்ல. தைரியமாக எதிர்த்து நிற்போம். திமுகதான் எங்கள் எதிரி என பழனிசாமி கூறியுள்ளார். நீ ஏன் குறுக்கே வருகிறாய். போகிற போக்கில் அடித்து தள்ளி விடுவேன். கட்சியில் மரியாதை இல்லை என்று கூறும் நீ, இந்த கட்சிக்கு என்ன செய்தாய் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
நான் இதுவரை ஒரே கட்சியில்தான் உள்ளேன். நீ முதலில் காங்கிரஸ், அடுத்து தமாக, பாஜக, தேமுதிக, அதிமுக, ஓபிஸ் அணி, தற்போது மீண்டும் அதிமுக. வெட்கமாக இல்லையா உனக்கு. ஒரு வழக்ப்கு போட்டாலே, நீ அடுத்த கட்சிக்கு மாறி விடுவாய். நீ ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வீடியோ என்னிடம் உள்ளது. என்னைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி உள்ளது? நீ தைரியசாலி என்றால் என்னைப்பற்றி விருதுநகரில் சொல்லி இருக்க வேண்டும். சென்னையில் சொல்லி உள்ளாய். என்னை பகைத்துக் கொண்டு விருதுநகரில் உன்னால் என்ன செய்ய முடியும்? இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் ஒருவரை, சக கட்சியின் முன்னாள், அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளிப்படையாக விமர்சித்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?- கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருதுநகரில் அதிமுக நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவிக்க முயன்ற கட்சி நிர்வாகியை, மேடையிலேயே ராஜேந்திர பாலாஜி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல செயல்படுவதாக பாண்டியராஜன் சென்னையில் விமர்சித்ததாக தகவல் வெளியானது. இதையறிந்து கோபமடைந்த ராஜேந்திர பாலாஜி நேற்று நடந்த கூட்டத்தில் பண்டியராஜனை ஒருமையில் கடுமையாக விமர்சித்துள்ளது அதிமுக உட்கட்சிப் பூசலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. இந்தப் பிரச்சினை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT