Published : 07 Mar 2025 08:49 PM
Last Updated : 07 Mar 2025 08:49 PM
கோவை: “தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து சரியான நேரத்தில் பேசுவோம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை நடவடிக்கை எப்படி திருப்புதல் ஆகும்?” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 7) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அரக்கோனத்தில் நடந்த சிஐஎஸ்எஃப் மண்டல பயிற்சி மையத்துக்கு ராஜா ஆதித்யா சோழன் மண்டல பயிற்சி மையம் என பெயர் சூட்டியுள்ளார். இதற்காக மத்திய அரசுக்கு பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்விழாவில் மத்திய அமைச்சர் பேசும்போது, தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை, தாய்மொழியான தமிழ் மொழியில் சொல்லிக் கொடுங்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வளவு பேசும், திமுக இதை ஏன் செய்ய முடியாது? எனக் கூறட்டும். இதற்கு சரியான பதிலை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்க வேண்டும். அதை விடுத்து இவ்வாறு பேசுவது சரியான விவாதம் அல்ல.
பாஜக தலைவர் எனக் கூறி நடிகரின் படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு ஒட்டியது திமுக. எங்கள் கட்சியின் தலைவரை கேவலப்படுத்துவதாகக் கூறி திமுகவினர், நடிகரின் முகத்தை அச்சிட்டு ஒட்டியிருப்பதைப் பார்த்தாலே, இது பாஜக சுவரொட்டி அல்ல என்பது புரிந்திருக்கும். நாங்கள் சொல்லும் எந்த வாதத்தையும், திமுகவினரால் எதிர்கொண்டு பேச முடியவில்லை. அதற்கு பதில் கூற முடியாமல், இவ்வாறு செய்து, திமுக தங்களை கேவலப்படுத்திக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக நடத்திவரும் மும்மொழிக் கல்விக்கான ஆதரவு கையெழுத்து இயக்கத்துக்கு மக்கள்ஆதரவு அளித்துள்ளனர். ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்க மாட்டோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். 2026-ல் நாங்கள் உங்களை மாற்றிவிட்டு மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவோம். மக்களவைத் தேர்தலுக்கு பிறகே, எங்கள் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி 1 கோடி பேர் என்ற இலக்கை வைத்துள்ளோம். பாஜக செல்வாக்கை 2026-ல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்ப்பார்.
பாஜகவின் கையெழுத்து இயக்கத்துக்கு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். நாங்கள் மூன்று மொழி படிக்க வேண்டாமா என அவர்கள் கேட்க மாட்டார்களா? இதற்கு உரிய பதிலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவிக்கட்டும். பாஜகவின் கையெழுத்து இயக்கம் சர்க்கஸ் மாதிரி இருக்கிறது என கூறும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி நீட்டுக்கு நடத்திய கையெழுத்து இயக்கம் பற்றி கூறட்டும். மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருக்கு ஏன் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதவில்லை?. தமிழகத்தின் உரிமையை மேகேதாட்டுவிலும் விட்டுக்கொடுக்க தயாராகி விட்டார். முதல்வர் ஸ்டாலின் நமது உரிமையை காப்பாற்றுவார் என யாரும் நம்ப மாட்டார்கள். ஒரு கோமாளி கூட நம்ப மாட்டான். ஞானசேகரன் விவகாரத்தில் போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த பிறகு, எனது செய்தியாளர் சந்திப்பு இருக்கும்.
சாராய அமைச்சர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தால் அது எப்படி திசை திருப்புவதாகும்? இவர்கள் டாஸ்மாக்கை வைத்து, சாராய ஆலையை வைத்து கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்குகின்றனர். இதுதொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் எப்படி தவறாகும்? தமிழகத்தில் பாஜக கட்சி வேண்டும் என்ற அரசியல் சூழலை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.
எந்தக் கட்சியையும், தலைவரையும் நாங்கள் சிறுமைப்படுத்தி பேசவில்லை. எந்தக் கட்சியோட கூட்டணி?, தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும்?, முக்கிய கட்சி யாராக இருக்கும்?, யார் முதல்வர்? என்பதையெல்லாம் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். நாங்கள் யாருக்கும் எதிரியில்லை. எங்கள் நோக்கம் பாஜகவை நிலைநிறுத்த வேண்டும். சரியான நேரத்தில் கூட்டணியை பற்றி பேசுவோம். இன்றயை சூழலில் தே.ஜ.கூட்டணி பலமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT