Last Updated : 07 Mar, 2025 07:46 PM

 

Published : 07 Mar 2025 07:46 PM
Last Updated : 07 Mar 2025 07:46 PM

“ஜனநாயகம் குறித்து பேச பாஜக தலைவர்களுக்கு அருகதை இல்லை” - தமிழிசைக்கு துரை வைகோ பதிலடி

துரை வைகோ | கோப்புப்படம்

சென்னை: ஜனநாயகம் குறித்து பேச பாஜக தலைவர்களுக்கு அருகதை இல்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மக்காசோளத்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். இதனடிப்படையில் வரியை ரத்து செய்த முதல்வர், துணை முதல்வர், வேளாண்துறை, நிதித்துறை அமைச்சர்கள் ஆகியோருக்கு மக்காச்சோள விவசாயிகள் சார்பாகவும், மதிமுக சார்பாகவும் நன்றி. அதேநேரம், விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைக்கு காரணமான மத்திய அரசு, அனைத்து பயிர் காப்பீட்டு திட்டத்தின் சிக்கல்களை களைவதோடு, குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து விவசாயிகளை காக்க வேண்டும்.

கையெழுத்து இயக்கத்தைப் பொருத்தவரை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். அதற்கு வரவேற்பு இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். கையெழுத்து வாங்கக் கூடிய ஜனநாயக உரிமையில்லையா என்கிறார் முன்னாள் ஆளுநர் தமிழிசை. தங்களுக்கு எதிராக செயல்படுவோர் மீது அமலாக்கத் துறை உள்ளிட்டவற்றின் மூலம் நடவடிக்கை எடுக்கும் பாஜகவுக்கு, ஜனநாயகம் குறித்து பேச அருகதையோ, தகுதியோ கிடையாது. சாதி, மதம் வைத்து அரசியல் செய்வோரை தீவிரவாதிகளை விட மோசமானவர்களாகவே கருத வேண்டும். இத்தகைய அரசியல் சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மதவாத சக்திகளை வளரவிடக் கூடாது என்பதில் தவெக தலைவர் விஜய் தெளிவாக இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இருமொழிக் கொள்கையால் தான் நம் இளைஞர்கள் உலகளவில் பல்வேறு துறைகளில் முன்னேற்றமடைந்துள்ளனர். வடமாநிலங்களில் ஆங்கிலம் கூட தேவையில்லை என்னும் பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கிறது.

மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை திசை திருப்பவும், மத்திய பாஜக அரசின் நிர்வாக திறமையின்மையை மறைப்பதற்காகவும் மொழிக் கொள்கை, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை போன்றவற்றில் விவாதங்களை உருவாக்குகின்றனர். மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு தொடர்ந்தால் 234 தொகுதிகளில் டெபாசிட் இழப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார். அப்போது, கொள்கை விளக்க அணிச் செயலாளர் வந்தியத்தேவன், துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தீர்மானக் குழு செயலாளர் மணிவேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x