Published : 07 Mar 2025 06:49 PM
Last Updated : 07 Mar 2025 06:49 PM
நாகர்கோவில்: “திமுக மிகப் பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை திமுக அழித்து வருகிறது. தமிழர் என்ற உணர்வு இல்லாமல் தற்போது ஆங்கிலம் பேசும் நிலைதான் உள்ளது. குழந்தைகள் கல்வியில் திமுக அரசு விளையாடக் கூடாது” என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தி.மு.க.வினர் 1967-க்கு பிறகு 2026 தேர்தலை பயன்படுத்தி குறுகிய நோக்கத்துடன் மொழி பிரச்சினையை மீண்டும் உருவாக்கி உள்ளனர். தாய் மொழியில் கல்வி படிக்க வேண்டும் அத்துடன் ஆங்கிலம் படிக்க வேண்டும். மூன்றாவதாக விரும்பிய மொழியை குழந்தைகள் படிக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் பள்ளிக்கூடங்களை திறந்தார். இலவச கல்வியைத் தந்தார். ஆனால், அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
தற்பொழுது அரசு பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆசிரியர்கள் உள்ளனர். தற்பொழுது அரசு பள்ளியின் தரம் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும். அரசு பள்ளிகள் மூடப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் குழந்தைகளை அப்பா என்று கூறுமாறு கூறியது சந்தோஷமான ஒன்றுதான். அவர் தந்தை ஸ்தானத்திலிருந்து சிந்தித்து செயல்பட வேண்டும்.
மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெறும்போது எங்கள் எம்பிக்களுக்கு இந்தி தெரியும் என்று கலைஞர் கூறினார். திமுக தலைவர்களின் குழந்தைகளுக்கு ஒரு நியாயம், தொண்டர்களின் குழந்தைகளுக்கு ஒரு நியாயமா? திமுக மிகப் பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை திமுக அழித்து வருகிறது. தமிழர் என்ற உணர்வு இல்லாமல் ஆங்கிலம் பேசும்நிலை தான் தற்பொழுது உள்ளது குழந்தைகள் கல்வியில் திமுக அரசு விளையாடக் கூடாது.
மத்திய அரசு எந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்குகிறதோ, அந்த திட்டத்துக்குதான் அந்த நிதியை பயன்படுத்த வேண்டும். வேறு திட்டத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் மத்திய அமைச்சரே குற்றவாளியாவார். தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.
தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. உயிரை எடுக்கும் அளவுக்கு விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசு பள்ளி மாணவரிடம் கையெழுத்து வாங்குவதாக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளதாக கூறுகிறீர்கள். ஓர் அமைச்சர் இப்படி கூறக் கூடாது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். துணை முதல்வர் பொறுப்புடன் இருக்க வேண்டும். அவருக்கு அதிக இடத்தை முதல்வர் கொடுத்து வருகிறார்.
முதல்வர் புகைப்படங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் துணை முதல்வர் புகைப்படங்களும் இருந்து வருகிறது. ரேஷன் கடைகளிலும் இரண்டு படங்களும் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் மோடியின் படம்தான் ரேஷன் கடைகளில் இருக்க வேண்டும். மத்திய அரசு அரிசி வழங்கி வருகிறது. தமிழக அரசு அதனை விநியோகம் செய்து வருகிறது. கொடுப்பவர் படம் இல்லை. விநியோகம் செய்பவரின் படம் மட்டும் ரேஷன் கடைகளில் உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்துக்கு வந்தவர்கள் எல்லாம் வாழ்த்த வந்தவராக மட்டும் கருதக் கூடாது. வீழ்த்துவதற்காகவும் வந்திருக்கலாம்” என்றார். இந்தப் பேட்டியின்போது குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார், முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி மற்றும் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT