Last Updated : 07 Mar, 2025 04:11 PM

17  

Published : 07 Mar 2025 04:11 PM
Last Updated : 07 Mar 2025 04:11 PM

“மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடிப்பதே ஸ்டாலினின் வேலை” - எல்.முருகன் சாடல்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மக்கள் மருந்தகம் கடையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார்

சென்னை: “மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடிப்பதே முதல்வர் ஸ்டாலினின் வேலை” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம் வெள்ளாள தெருவில் மத்திய அரசின் ‘மக்கள் மருந்தகம்’ கடை செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அந்த ‘மக்கள் மருந்தகம்’ கடையின் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, மக்கள் மருந்தகத்தை பார்வையிட்டு, கடையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர், “அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் எண்ணமாக உள்ளது. அதனால் தான் தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்துக்கு மோடி கொடுத்துள்ளார். எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தான் இருந்தது. தற்போது 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன.

அதேபோல், ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் மருந்தகம் கடைகளை மோடி திறந்துள்ளார். இந்தியா முழுவதும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட, மக்கள் மருந்தகம் கடைகள் உள்ளன. தமிழகத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் 50 முதல் 80 சதவீதம் குறைவான விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. இதேபோல் ரூ.5 லட்சம் வரையிலான ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தையும் பாஜக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு பல மக்கள் நலத்திட்டங்களை மோடி அரசு செய்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் மோடியின் திட்டங்களை ‘காப்பி’ அடித்து வருகிறார்கள். அவர்கள் சொந்தமாக எதையும் செய்வதில்லை. மத்திய அரசின் திட்டங்களை ‘காப்பி’ அடிப்பது மட்டுமே முதல்வர் ஸ்டாலினின் வேலையாக இருந்து கொண்டிருக்கிறது. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு 36 மணி நேரத்துக்குள்ளாகவே 7 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

பொறியியல், மருத்துவப் படிப்புகளை தமிழில் கற்பிக்க வேண்டும். உள்துறை அமைச்சரும் அதைத்தான் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட திருவள்ளூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை கட்சியில் இருந்து நீக்கியது, அதிமுக உட்கட்சி விவகாரம். அதே நேரத்தில், மும்மொழி கொள்கைக்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. 2026-ல் ஸ்டாலின் ஆட்சி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அவரை வீட்டுக்கு அனுப்பியதும் மும்மொழி கொள்கை தமிழகத்தில் நிறைவேற்றப்படும்.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x