Published : 07 Mar 2025 01:15 PM
Last Updated : 07 Mar 2025 01:15 PM
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனி அரசாங்கம் நடத்தி முதல்வர் ரங்கசாமிக்கு தெரியாமல் உத்தரவிடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அரசு அதிகாரிகள் கூட்டம் நடத்தி தனிப்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் இல்லை. அரசு நிர்வாகத்தை தனது கையில் எடுத்து அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கிறார். யார் ஆட்சியில் இருந்தாலும் மக்களால் தேர்வான முதல்வர், அமைச்சர்கள் பரிந்துரைகளைதான் ஆளுநர் ஏற்க வேண்டும். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மத்திய அரசுக்கு அனுப்பலாம்.
கிரண் பேடியின் செயல்பாடுபோல் தற்போதைய ஆளுநர் செயல்பாடும் உள்ளது. இது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. ஆளுநர் கைலாஷ்நாதன் தனி அரசாங்கம் நடத்துகிறார். முதல்வர் ரங்கசாமிக்கு தெரியாமல் உத்தரவிடுவது ஜனநாயகத்துக்கும், அரசியமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. முதல்வர், அமைச்சர்களை உதாசீனப்படுத்துகிறார். தங்கள் பதவியையும், நாற்காலியையும் காப்பாற்ற முதல்வர், அமைச்சர்கள் வாய்மூடி டம்மி அரசு நடத்துகின்றனர்.
விதிமீறி கோப்புகள் அனுப்பிவிட்டு அதிகாரிகளை குறைகூறி தப்பிக்க முதல்வர் முயல்கிறார். நிர்வாகத்தை தலைமை வகித்து நடத்தும் முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளை குறை கூறமுடியாது. அது தன்னைதானே குறை கூறுவதற்கு இணையாகும். தற்போது ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரி, தமிழகம் மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு வரும் கர்ப்பிணி பெண்களை எங்கிருந்து வருகிறீர்களோ அங்கேயே பிரசவம் பார்த்துகொள்ளுங்கள் என்று கூறி வருகின்றனர்.
இது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். அனைவருக்கும் சிகிச்சை தரும் பொறுப்பு உண்டு. ஜிப்மரிலேயே மருத்துவம் செய்ய இயக்குநருக்கு வலியுறுத்த உள்ளேன். சுற்றுலா பயணிகள், மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. அந்த காவல் நிலையங்களுக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆட்சியில் இருப்பவர்களுக்கு கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என்றால் எந்த காவல்நிலைய சரகத்தில் கஞ்சா விற்பது பிடிக்கப்பட்டால் அந்த காவல்நிலையத்தின் அதிகாரியை இடமாற்றம் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT